கதவுகளில் ‘வெல்டிங்’ வைத்து டாஸ்மாக் கடைகள் அடைப்பு -மதுபாட்டில் திருட்டை தடுக்க நடவடிக்கை

சேலம் : கொரோனா பரவலை தடுக்க 14 நாள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 24ம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருப்பதால், இக்காலக்கட்டத்தில் டாஸ்மாக் கடைகளும் மூட உத்தரவிடப் பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 220 டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டு, சீல் வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஒரு சில கடைகளை விற்பனையாளர்கள், இரவு நேரத்தில் திறந்து மதுபாட்டில்களை எடுப்பதாக புகார் எழுந்தது. இதுபற்றி மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடையின் கதவு பகுதியை இணைக்கும் வகையில் நடுவில் இரும்பு கம்பிகளை வைத்து, இருபுறத்திலும் வெல்டிங் ெசய்து அடைக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதன்பேரில் நேற்றைய தினம் டாஸ்மாக் கடைகளின் ஷட்டர்களின் முன் இரும்பு கம்பியை வைத்து வெல்டிங் வைத்து அடைத்தனர். சேலம் டவுன், முள்ளுவாடி கேட், சென்ட்ரல் இறக்கம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் இத்தகைய அடைப்பை அதிகாரிகள் முன்னிலையில் ஊழியர்கள் செய்தனர்.

இது பற்றி டாஸ்மாக் அதிகாரிகள் கூறுகையில், ‘‘ஊரடங்கு காலத்தில் அரசு உத்தரவுபடி டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது. இக்கடைகளில் திருட்டு நடக்காமல் தடுக்கவும், ஊழியர்கள் முறைகேடாக மதுபானங்களை எடுப்பதை தவிர்க்கவும், ஒவ்வொரு கடையையும் மிக கவனமாக அடைத்துள்ளோம். அதில் தற்போது இரும்பு கம்பிகளை கொண்டு வெல்டிங் வைத்து அடைத்துவிட்டோம். இனி யாராலும் திறக்க இயலாது. ஊரடங்கு முடிந்து அரசு அறிவித்த பின்னரே டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு, மதுபானங்கள் விற்பனை செய்யப்படும்,’’ என்றனர்.

Related Stories:

>