வெளியூர் வியாபாரிகள் வராததால் திண்டுக்கல் மார்க்கெட்டில் பூக்கள் விலை கடும் வீழ்ச்சி-நிவாரணம் வழங்க வேண்டுகோள்

திண்டுக்கல் : திண்டுக்கல்லை சுற்றியுள்ள சின்னாளபட்டி, பெருமாள்கோவில்பட்டி, கலிங்கப்பட்டி, செம்பட்டி, வெள்ளோடு உள்பட பல பகுதிகளில் பூக்கள் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா காலத்தில் பூக்கள் பயிரிட்ட விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகினர். இதனால் சிறிதுகாலம் பூக்கள் விவசாயத்தை நிறுத்தி வைத்திருந்தனர்.

அதன்பின் கொரோனா குறைந்தததும் மீண்டும் பூக்களை பயிரிட்டனர். இந்நிலையில் தற்போது கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருவதால் தமிழக அரசு முழு ஊரடங்கை பிறப்பித்துள்ளது. இதன் காரணமாக அனைத்து கோயில்களும் மூடப்பட்டு உள்ளன. திருவிழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை கடும் கட்டுப்பாடுகளுடன் நடத்த அனுமதித்துள்ளது. இதனால் பூக்கள் பயன்பாடு கணிசமாக குறைந்து திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் அதன் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. மேலும் கொரோனா அச்சத்தால் கேரளா, புதுச்சேரி போன்ற ஊர்களில் இருந்தும் வியாபாரிகள் யாரும் வருவதில்லை.

திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் சராசரியாக ஒரு நாளைக்கு 40 டன் பூக்கள் விற்பனைக்காக வெளியூர் செல்லும். ஆனால் தற்போது பூக்களை வாங்க வெளியூர் வியாபாரிகள் வருவது இல்லை. உள்ளூரில் மட்டுமே பூ விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக பூக்களின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. கடந்த 15 நாட்களுக்கு முன்பு ரூ.300க்கு விற்ற ஒரு கிலோ மல்லிகை பூ தற்போது ரூ.70க்கு விற்பனையாகிறது.

(ஒரு கிலோ அளவில்) ரூ.150க்கு விற்ற முல்லை ரூ.30க்கும், ரூ.200க்கு விற்ற கனகாம்பரம் ரூ.100க்கும், ரூ.80க்கு விற்ற ரோஸ் ரூ.15க்கும், ரூ.30க்கு விற்ற கோழிக்கொண்டை ரூ.5க்கும், ரூ.60க்கு விற்ற சம்பங்கி ரூ.5க்கும், ரூ.40க்கு விற்ற செண்டுமல்லி ரூ.7க்கும், ரூ.100க்கு விற்ற அரளி ரூ.10க்கும், ரூ.100க்கு விற்ற செவ்வந்தி ரூ.30க்கும் விற்பனையானது. இதேபோல் அனைத்து பூக்களின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. இதனால் பூக்களை பயிர் செய்த விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே தமிழக அரசு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories:

>