ஊட்டி நகராட்சி மார்க்கெட் காய்கறி கடைகள் சாந்தி விஜய் பள்ளி மைதானத்திற்கு மாற்றம்

ஊட்டி : ஊட்டி மாரக்கெட்டில் உள்ள 150க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் சாந்திவிஜய் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்திற்கு மாற்றப்பட்டது.ஊட்டி நகராட்சிக்குட்பட்ட மார்க்கெட்டில் 1500க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்கு மளிகை, காய்கறி, பழக்கடைகள், துணிக்கடைகள், இறைச்சி கடைகள் என அனைத்து கடைகளும் உள்ளன. இதனால், எப்போதும் மக்கள் கூட்டம் காணப்படும்.

 ஊட்டி நகரில் உள்ள மக்கள் மட்டுமின்றி, மாவட்டம் முழுவதிலும் இருந்து பொதுமக்கள் வந்து பொருட்களை வாங்கிச் செல்வது வழக்கம். இந்நிலையில், கொரோனா பாதிப்புக காரணமாக மக்கள் கூடுவதை தவிர்க்கும் நோக்கில், மார்க்கெட் கடைகளை வெளியில் உள்ள பொது இடங்களில் வைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து மார்க்கெட்டில் உள்ள 150க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள், தேங்காய், வாழை இலை மற்றும் எலுமிச்சை வியாபாரிகள் தங்களது கடைகளை நேற்று ஊட்டியில் உள்ள சாந்தி விஜய் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு மாற்றிவிட்டனர். அதேசமயம், இறைச்சி சடைகள், மளிகை கடைகள் மற்றும் பழக்கடைகள் வழக்கம் போல் மார்க்கெட்டிற்குள்ளே திறக்கப்பட்டுள்ளது.

இதனால், மார்க்கெட்டில் பொதுமக்கள் கூடுவது சற்று குறைந்துள்ளது. இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘‘பகல் 12 வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதியுள்ளதால், ஏராளமான பொதுமக்கள் மார்க்கெட்டிற்கு வந்து செல்கின்றனர். இதனால், மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

இதனை தவிர்க்கும் நோக்கில் அரசின் அறிவுரையை ஏற்று நாங்கள் ஊட்டி சாந்திவிஜய் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்திற்கு காய்கறி கடைகளை மாற்றியுள்ளோம். பொதுமக்கள் பலரும் தற்போது இங்கு வந்து காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர்’’ என்றனர்.

அதேசமயம் மளிகை கடைகள் மத்திய பஸ் நிலையத்திற்கு மாற்ற அரசு அறிவுறத்தியுள்ளது. ஆனால், வியாபாரிகள் தயக்கம் காட்டுவதால், மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் வழக்கம் போல் காணப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

Related Stories: