ஆர்கெஸ்ட்ரா பொண்ணு

நன்றி குங்குமம் தோழி

Advertising
Advertising

பக்கத்தில் பார்க்கும் போது அமைதி யாய் இருக்கும் செளபர்ணிகா, மேடை ஏறியதும், சுவிட்ச் போட்டது போல, புது உற்சாகத்துடன் சுற்றி இருப்பவர்களே வியக்கும் அளவுக்கு அருமையாய் பீட்பாக்ஸிங் செய்கிறார். பீட் பாக்ஸிங் என்றதும் இது பாக்ஸிங் போல ஒரு வீர விளையாட்டுன்னு நினைக்க வேண்டாம்.

“முதலில் பாதி பேருக்கு பீட்பாக்ஸிங் பற்றி என்னென்னே தெரியாது’’ என்கிறார் சௌபர்ணிகா. முதலில் அவர்களுக்கு ‘டுப்பு சிக்கு டுப்பு சிக்கு’ன்னு தான் ஒலி கேட்கும். ஆனால் அந்த ஒலியில் பல வகையான இசைக் கருவிகளின் ஒலியை எழுப்புவது தான் பீட் பாக்ஸிங். அதாவது இசைக் கருவிகளுக்கு பதிலாக அந்த ஒலிகளை வாயிலேயே செய்வது.

நாலு பேர் செய்ய வேண்டியதை ஒருவரே வாயால ஒலிகள் எழுப்பி அந்த இசையை செய்ய முடியும். குறிப்பாக டிரம்ஸ் போன்ற இசைக் கருவிகளின் ஒலியை ஈஸியா செய்யலாம். இசைக் கருவிகளில் ஒலியை எழுப்ப பெரிய கருவிகளை தூக்கிக் கொண்டு எங்ேகயும் அலைய வேண்டாம். பல பேர் செய்வதை ஒருத்தரே செய்யலாம் என்று முதலில் சொல்லி புரியவைக்கணும்’’ என்றவருக்கு அவர் நண்பர் தான் இன்ஸ்பிரேஷனாம்.

‘‘இன்ஸ்பிரேஷன் என்று சொல்வதை விட அவனை நான் தான் அதிகமா டீஸ் செய்து இருக்கேன். அப்ப நான் பன்னிரெண்டாம் வகுப்பு ேதர்வு முடிச்சிட்டு வீட்டில் இருந்த போது தான் இந்த கலை மேல் ஆர்வம் ஏற்பட்டது. என் நண்பர் ஒருவர் பீட்பாக்ஸிங் செய்வார். முதலில் அவர் வாயில் எழுப்பும் ஒலியை கண்டு நானும் என் மற்ற நண்பர்களும் சேர்ந்து கிண்டல் செய்வோம். அவரை கிண்டல் செய்ய அவரை போலவே பேசி பீட்பாக்ஸிங்கும் செய்ய முயற்சி பண்ணேன்.

திடீர்னு அது நல்லா வந்துவிடவே, ஃப்ரெண்ட்ஸ் நீ முயற்சி செய்து பாருனு சொன்னாங்க. அப்படி ஆரம்பிச்சது தான் பீட்    பாக்ஸிங். இதுல மூச்சு பயிற்சியும் மூச்சு கட்டுப்பாடும்தான் ரொம்ப முக்கியம். நான் கர்நாடக இசையை முறையா கத்துக்கிட்டதால எனக்கு பீட்பாக்ஸிங்கை எளிதாக கற்றுக் கொள்ள உதவியாய் இருந்துச்சு” என்றவர் முதன் முதலில் கேட்பவர்கள் அசந்துவிடுவார்களாம்.

‘‘பொதுவாக  பீட்பாக்ஸிங்கை  ஆண்கள் செய்தாலே பார்வையாளர்கள் அசந்திடுவாங்க. இதில் ஒரு பெண் பீட்பாக்ஸிங் செய்தால், அதற்கு கிடைக்கும் கைத்தட்டல்களும் பாராட்டுகளுமே வானத்தை பிளக்கும். நான் மேடையேறி பீட்பாக்ஸிங் பண்ணும் போது, அந்த சந்தோஷத்தை விவரிக்கவே முடியாது. அதுவரை இருக்கும் பதட்டம் எல்லாமே பறந்துபோய், ஒரு புத்துணர்ச்சி வரும். கூட்டம் கொஞ்சம் ரசிக்க ஆரம்பிச்சு கைதட்டினதும், அப்படியே ஒரு டிரிங்க் குடிச்சது போல இருக்கும்.

என்னோட அம்மா, அப்பா இருவருமே எனக்கு முழு சப்போர்ட். அதே சமயம் நான் படிக்கும் கல்லூரிக்கும் நான் மிகப்பெரிய நன்றி சொல்லணும். நமக்கு ஒரு டேலண்ட் இல்ல ஆசை இருக்குனு சொன்னாலே போதும். அவங்க அந்த திறமையை மதிச்சு மேல தூக்கி விட்டுருவாங்க. நம் திறமைக்கு ஏற்ற போட்டிகளுக்கும் அனுப்பி, ‘போ ஜெயிச்சுட்டு வா’னு சொல்வாங்க. போட்டியின் போது காலேஜ் நண்பர்கள் கொடுக்கும் சப்போர்ட்டும், கைத்தட்டல்களும் ரொம்பவே உற்சாகப்படுத்தும்’’  என்றவர் கிடைத்த வாய்ப்பினை நழுவவிட்டுட்டாராம்.

ஒரு முறை எங்க கல்லூரியில் கல்ச்சுரல் நடைபெற்றது. அந்த முறை இசைஞானி இளையராஜா அவர்களின் பாட்டு தான் தீம். அவரின் பாட்டுக்கு பீட்பாக்ஸிங் செட் ஆகாது. அதனால அந்த முறை நிகழ்ச்சியின் போது நான் என்னுடைய திறமையை வெளிப்படுத்தல. ஆனால் அவர் தன் 75வது பிறந்த நாளை எங்களின் கல்லூரியில் கொண்டாட வரப்போகிற விஷயம் எனக்கு அப்பத்தான் தெரிஞ்சுது. அவர் முன்னாடி என் திறமையை வெளிப்

படுத்த முடியலைன்னு எனக்கு ரொம்பவே கஷ்டமா போயிடுச்சு. பயிற்சியும் எடுத்துக் கொள்ளவில்லை. இதுக்கும் மேல நாம் வருந்துவதில் பலன் இல்லைன்னு நினைச்சு அப்படியே விட்டுட்டேன்.

ஆனா என்னோட பேராசிரியர், நிகழ்ச்சியின் முந்தைய நாள் என்னை தொலைபேசியில் அழைத்து  இளையராஜா முன் பர்ஃபாம் பண்ணியே ஆகணும்னு சொல்லிட்டாங்க. தேடி வந்த வாய்ப்பை இழக்க வேண்டாம்னு ஒத்துக்கிட்டேன். ஆனா அன்றைய ராத்திரி ஒரு நிமிஷம் கூட தூக்கம் வரல. டென்ஷன், கூடவே அவ்வளவு பெரிய லெஜண்ட் முன் பீட்பாக்ஸிங் பண்ண போற குஷியும்தான் இருந்தது. மறுநாள் காலை, மத்த டீம் எல்லாமே பயங்கரமா பயிற்சி செய்திட்டு தயாரா இருந்தாங்க.

நான் மட்டும் தனியா இருந்தேன். அப்போ, என்ன மாதிரியே வயலின் வாசிக்கும் ஒரு பொண்ணும் தனியா இருந்தா. அவளிடம் நான், இரண்டு பேருமே தனியா இருப்பதால் இணைந்து செய்யலாம்ன்னு கேட்டேன். அவளும் ஓ.கே சொல்ல இருவரும் இணைந்து இளையராஜா பாட்டுக்கு வயலினுடன் பீட்பாக்ஸிங் பண்ணோம். நினைச்சு பார்க்காத அளவு ரொம்ப நல்லா வந்துருச்சு. இளையராஜாவே, எங்களை மேடைக்கு அழைத்து வாழ்த்தி ஆசீர்வாதம் செய்தார்’’ என்றவர் அதற்கு பின் கல்லூரியில் சூப்பர் ஸ்டாராக வலம் வர ஆரம்பித்தார்.

‘‘அந்த நிகழ்ச்சிக்கு பிறகு, எனக்குள் ஒரு பெரிய நம்பிக்கை வந்தது. அந்த சமயத்துலதான், ஒரு விளம்பரத்துல பீட்பாக்ஸிங் செய்து நடிக்கிற வாய்ப்பும் கிடைச்சுது. ‘‘Noodles” நிறுவனத்துக்கான விளம்பரம். பெரிய தயாரிப்பு நிறுவனம், பேச்சு வார்த்தை போயிட்டு இருந்துச்சு. ஆனா அவங்க மும்பையில இருக்கும் பீட்பாக்ஸர் கிடைச்சா நல்லா இருக்கும்னு சொன்னாங்க. அதனால எனக்கு கிடைக்காதுனு நினைச்சு விட்டுட்டேன். திடீர்னு ஒரு நாள், நாளைக்கு ஷூட்டிங். மும்பை கிளம்பி வாங்கனு சொல்லிட்டாங்க. ஒரு நிமிஷம் ஒண்ணுமே புரியல. எனக்கும் அம்மாக்கும் அவங்களே விமானத்துல டிக்கெட் புக் செய்து கொடுத்தாங்க.

எப்பவுமே பெண் பீட்பாக்ஸர்களை அவ்ளோ நம்ப மாட்டாங்க. பொண்ணுதானே அப்படி என்ன பெருசா பண்ண போறானு தான் சொல்வாங்க. ஆண்களுக்கு வாய்ஸ் ‘Depth’ வேற மாதிரி இருக்கும். அதனால பெண்கள் கொஞ்சம் அதிகமா முயற்சி செய்யனும். தொடர்ந்து பயிற்சி செய்தா எதையும் சாதிக்கலாம். நான் கல்லூரியில் தேர்வு எழுதும் போது கூட என்னையறியாமல் பீட்பாக்ஸிங் செய்வேன்’’ என்றவர் குரல் வளத்திற்கு டிப்ஸ் அளித்தார்.‘‘பீட்பாக்ஸிங்கிற்கு குரல் தான் பிரதானம்.

ஆனால் நான் ஏதும் சிறப்பு பயிற்சி எல்லாம் எடுத்துக் கொள்வதில்லை. ஐஸ்க்ரீம் எல்லாமே எப்பவும் போல சாப்பிடுவேன். இப்போ என் குரல் பீட்பாக்ஸிங் செய்ய பழகிக்குச்சு. அது தானாவே வரும். ஆரம்பத்துல எதுவுமே சரியா வராது. அதனால் சோர்வு அடைந்திட கூடாது. தொடர்ந்து பயிற்சி செய்து கொண்டே இருக்கணும். நமக்கான வாய்ப்பு கண்டிப்பா கிடைக்கும். அதை கெட்டியாக பிடித்துக் கொள்ளணும். அதன் பிறகு நாம் திரும்பி பார்க்கவே நேரம் இருக்காது’’ என்றார் உற்சாகமாய் நம்பிக்கையுடன், தமிழகத்தின் இளம் பெண் பீட் பாக்ஸர் செளபர்ணிகா.                  

ஸ்வேதா கண்ணன்

ஏ.டி.தமிழ்வாணன்

Related Stories: