கொரோனா அறிகுறியுடன் அரசு மருத்துவமனைகளில் குவியும் பொதுமக்கள்-தடுப்பூசி போட மக்கள் ஆர்வம்

ஈரோடு :  ஈரோடு ஈவிஎன் ரோட்டில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் விபத்து, தீக்காயம், மகப்பேறு சிகிச்சை, காச நோய், மன நல சிகிச்சை உள்ளிட்ட அனைத்து வகையான நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அது மட்டும் அல்லாமல் தற்போது கொரோனா நோய் தொற்றுக்கு உண்டான சிகிச்சையும், அதற்கான பரிசோதனை, கொரோனா தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது.

இதனால், இந்த மருத்துவமனையில் தினசரி 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்கின்றனர். 500க்கும் மேற்பட்ட நோயாளிகள் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா அறிகுறியான சளி, காய்ச்சல், இருமல், தலைவலி, உடல் சோர்வு, சுவை இழப்பு, வாசனை இழப்பு போன்ற தொந்தரவுகளால் பாதிக்கப்பட்ட மக்கள் நேற்று ஏராளமானோர் ஈரோடு அரசு மருத்துவமனைகளிலும், மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைகளிலும் குவிந்தனர்.

அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால், கொரோனா பரிசோதனை முடிவுகள் 4 நாட்களுக்கு மேல் ஆவதால், பரிசோதனை செய்த மக்கள் பீதியுடனே காத்திருக்க வேண்டி உள்ளதால், கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, பரிசோதனையின் முடிவுகளை அதிகபட்சமாக 24 மணி நேரத்தில் தெரிவிக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில், முதியவர்கள் மட்டும் அல்லாது இளைஞர்கள், சிறுவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், கொரோனாவில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள அரசு மருத்துவமனைகளிலும், தடுப்பூசி முகாம்களிலும் தடுப்பூசி போட மக்கள் கூட்டம் அலைமோதியது.

இதில், ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தவர்களுக்கும், முந்தைய நாளில் வந்து பதிவு செய்தவர்கள் என தினசரி 100 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படுகிறது. எனவே, தடுப்பூசியை கூடுதலாக பெற்று, தடுப்பூசி போடும் எண்ணிக்கையை அதிகப்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>