சிரமப்பட்ட ஆதரவற்றோருக்கு உணவு வழங்கிய ராணுவ வீரர்கள்

சாயல்குடி :  கடலாடி, சாயல்குடி பகுதியில் முழு ஊரடங்கில் உணவின்றி பரிதவித்த மனநலம் பாதிக்கப்பட்டோர், சாலையோரம் வசிப்போருக்கு ராணுவ வீரர்கள் உணவளித்தனர். கொரோனா பரவலால் கடந்த 10 ந்தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கடலாடி, சாயல்குடி பகுதியிலுள்ள உள்ள டீக்கடை, ஹோட்டல்கள் நேரக் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டாலும் பார்சல் மட்டுமே வழங்கப்படுகிறது.

இதனால் மனநலம் பாதிக்கப்பட்டோர், ரோட்டோரத்தில் வசிக்கும் ஆதரவற்றோர் உணவின்றி சிரமம்படும் நிலை ஏற்பட்டது. கடந்த ஓராண்டாக ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர்கள் சேதுசீமை பட்டாளம் என்ற அமைப்பை ஏற்படுத்தி ஆதரவற்றோருக்கு கொரோனா கால உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முதல் கடலாடி, மலட்டாறு முக்குரோடு, சாயல்குடி, நரிப்பையூர் என கிழக்கு கடற்கரை சாலையோரம் இருக்கின்ற மனநலம் பாதிக்கப்பட்டோர், ஆதரவற்றோருக்கு முன்னாள் ராணுவவீரர் சத்தியநாதன் தலைமையில் விடுமுறையில் வந்துள்ள ராணுவீரர்கள், துணை ராணுவ வீரர்கள் மூன்று வேளைக்கான உணவுகள், தண்ணீர்பாட்டில், பிஸ்கட் உள்ளிட்ட உணவு பொருட்களை வழங்கினர். முககவசத்தை வழங்கி மாட்டி விட்டனர்.

இதனை போன்று  கடலாடி போலீஸ் ஸ்டேசனில்  ஏட்டாக பணியாற்றும் ஆப்பனூரை சேர்ந்த முருகநாதன், உணவு ஏற்பாடு செய்து கடலாடி பகுதியில் மனநலம் பாதிக்கப்படோருக்கு 3 வேளையும் உணவுகளை வழங்கினார்.

Related Stories: