மதுரை ஆவினில் இருந்து 4 டன் நெய், 2 டன் பால்கோவா மாஜி அமைச்சருக்கு விநியோகம்-விசாரணையில் ‘திடுக்’ தகவல்

மதுரை : மதுரை ஆவினில் இருந்து 4 டன் நெய், 2 டன் பால்கோவா தென்மாவட்டத்தை சேர்ந்த அதிமுகவின் முன்னாள் அமைச்சருக்கு சென்றதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.மதுரை ஆவினில், பால், நெய், வெண்ணெய் உள்ளிட்ட உபபொருட்கள் உற்பத்தி செய்து விற்பனை செய்யப்படுகிறது. கடந்தாண்டு ஏப்ரல் முதல், நடப்பாண்டு மார்ச் வரை நெய், வெண்ணெய் உற்பத்தியில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக ஆவின் நிர்வாக இயக்குநருக்கு புகார்கள் தெரிவிக்கப்பட்டன.

இதனைத்தொடர்ந்து, பொதுமேலாளர்கள் ஆய்வு நடத்தினர். இதில், ரூ.13.71 கோடி முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை உறுதி செய்வதற்காக சென்னை ஆவின் துணை பதிவாளர் அலெக்ஸ் தலைமையிலான குழு கடந்த சில நாட்களாக மதுரை ஆவினில் விசாரணையிலும், தணிக்கையிலும் ஈடுபட்டது. இதில், ரூ.13.71 கோடி முறைகேடு நடந்துள்ளதை உறுதி செய்தனர்.

இதுதொடர்பாக, உதவி பொது மேலாளர்கள் கிருஷ்ணன், சேகர், மேலாளர் மணிகண்டன், துணை மேலாளர் வினிதா, விரிவாக்க அலுவலர் மாயகிருஷ்ணன் ஆகிய 5 பேரை ஆவின் இயக்குநர் நந்தகோபால் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இக்குழு தொடர்ந்த விசாரணையில், உற்பத்தி மட்டுமின்றி ஆவணங்களில் திருத்தம், பில்கள் மோசடி, நூதன தரக்கட்டுப்பாடு மோசடி என பல அதிர்ச்சியான தகவல்கள் கிடைத்தது.

இதுகுறித்து ஆவின் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘குழு விசாரணையில், கடந்தாண்டு தீபாவளி பண்டிகை நேரத்தில் மதுரை ஆவினில் இருந்து 4 டன் நெய், 2 டன் பால்கோவா ஆகியவை தென்மாவட்டத்தில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கண்டுபிடித்துள்ளனர்.

அதற்கு போலியான ரசீது தயாரிக்கப்பட்டதும் தெரிய வந்தது. ஆவின் முறைகேடு தொடர்பாக அப்போது இருந்த பெண் பொது மேலாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு விசாரணை நடைபெற உள்ளது. பொதுவாக ரூ.1 கோடிக்கு கீழ் முறைகேடு என்றால், ஆவினில் அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள். அதற்கு மேல் முறைகேடு என்றால், வணிக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மூலம் விசாரணை நடைபெறும். சென்னை அதிகாரிகள் குழுவின் இறுதி விசாரணைக்கு பின்புதான் யார் விசாரணை நடத்துவார்கள் என தெரியவரும்’’ என்றார்.

Related Stories: