ராஜபாளையம் பகுதியில் நாட்டு வெடிகுண்டுகள் மூலம் வனவிலங்குகள் வேட்டையா?வாய் கிழிந்த மாடு உயிருக்கு போராட்டம்

ராஜபாளையம் : ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதியில், நாட்டு வெடிகுண்டு வெடித்ததில், மேய்ச்சலுக்கு சென்ற எருமை மாடு, வாய் தாடை கிழிந்து உயிருக்கு போராடி வருகிறது.விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதியான அய்யனார்கோவில் அருகே கலாராணி என்பவருக்கு சொந்தமான 3 ஏக்கர் தோப்பு உள்ளது.

இந்த தோப்பில் நேற்று அதிகாலை பயங்கர வெடி சத்தம் கேட்டது. அங்கிருந்தவர்கள் அலறியடித்து சத்தம் கேட்ட இடத்தில் கூடினர். அங்கு, ேமய்ச்சலில் இருந்த கலாராணிக்கு சொந்தமான எருமை மாடு, வாய், தாடைகள் கிழிந்து, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்தது.

இதுகுறித்து  கலாராணி, ராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் புகாரளித்தார். போலீசார், வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். மேலும் காட்டுப்பன்றி போன்ற வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டு வைக்கப்பட்டதா? அல்லது வேறு ஏதும் சட்ட விரோத செயல்களுக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்ததா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து கலாராணி கூறுகையில், ‘‘இதேபோல் கடந்த 10 நாட்களுக்கு முன்பு, இதே பகுதியில் மற்றொரு மாடு, நாட்டு வெடிகுண்டை சாப்பிட்டு, உடல் சிதறி பலியானது. இதை கட்டுப்படுத்த போலீசார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

Related Stories: