தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகராக அப்பாவு போட்டியின்றி தேர்வு: மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சபாநாயகர் இருக்கையில் இன்று அமர வைப்பார்கள்

சென்னை: தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்று சாதனை படைத்தது. திமுக மட்டும் 125 இடங்களில் வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது.  முதல்வராக மு.க.ஸ்டாலின் கடந்த 7ம் தேதி பதவியேற்றுக் கொண்டார். அவருடன் 33 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். இதையடுத்து 234 எம்எல்ஏக்களும் பதவியேற்றுக் கொள்வதற்காக தமிழக சட்டப்பேரவை கூட்டம் நேற்று  காலை 10 மணிக்கு கூடியது. கூட்டம் தொடங்கியதும், தற்காலிக சபாநாயகராக தமிழக கவர்னரால் தேர்வு செய்யப்பட்ட கு.பிச்சாண்டி முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இந்நிலையில் தமிழகத்தின் 16வது சட்டப்பேரவையின் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகரை தேர்வு செய்வதற்காக சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது. இந்த கூட்டத்தில் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர்  ஆகியோர் முறைப்படி தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட உள்ளனர். முன்னதாக, சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தலில் போட்டியிட விரும்புகிறவர்கள் 11ம் தேதி (நேற்று) மதியம் 12 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று  சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தார்.

இதையடுத்து திமுக சார்பில் நெல்லை மாவட்டம், ராதாபுரம் தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட மு.அப்பாவு சபாநாயகர் பதவிக்கும், திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் தொகுதியில் இருந்து  சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட கு.பிச்சாண்டி துணை சபாநாயகர் பதவிக்கும் போட்டியிடுவார்கள் என்று திமுக தலைமை சார்பில் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டு இருந்தது. தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று காலை  10 மணிக்கு தொடங்குவதற்கு முன்பு சென்னை, சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் உள்ள சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனின் அறைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சரும் அவை முன்னவருமான துரைமுருகன், மு.அப்பாவு,  கு.பிச்சாண்டி ஆகியோர் வந்தனர். சபாநாயகர் பதவிக்கு போட்டியிடும் மு.அப்பாவு மற்றும் துணை சபாநாயகர் பதவிக்கு போட்டியிடும் கு.பிச்சாண்டி ஆகியோரது வேட்பு மனுக்கள், சட்டப்பேரவை செயலாளரிடம் தாக்கல் செய்யப்பட்டது.  வேட்புமனுக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார். அவை முன்னவரும் அமைச்சருமான துரைமுருகன் வேட்புமனுவை வழிமொழிந்தார்.

சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் பதவிக்கு நேற்று பகல் 12 மணிவரை வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. எனவே சபாநாயகராக மு.அப்பாவு, துணை சபாநாயகராக கு.பிச்சாண்டி ஆகியோர் இன்று போட்டியின்றி தேர்வு  செய்யப்படுவது உறுதியாகியுள்ளது. இன்று காலை 10 மணிக்கு சென்னை, கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவை கூட்டம் தொடங்குகிறது. அப்போது, சபாநாயகர் இருக்கையில் அமர்ந்தபடி, தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி இன்று காலை 10  மணிக்கு, 16வது சட்டப்பேரவையின் சபாநாயகராக அப்பாவு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார். அதன்பின்னர் சபாநாயகர்  இருக்கையில் இருந்து கு.பிச்சாண்டி இறங்கிவிடுவார்.

அதைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மு.அப்பாவுவின் கைகளை பிடித்து சபாநாயகர் இருக்கையில் அமரச் செய்வார்கள். அப்போது அவை முன்னவர் துரைமுருகனும் உடனிருப்பார்.

இதையடுத்து புதிதாக தேர்வு செய்யப்பட்ட சபாநாயகர் அப்பாவுவை வாழ்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் காங்கிரஸ், பாமக, பாஜ உள்ளிட்ட அனைத்துக்கட்சிகள் சார்பில் ஒருவர் வாழ்த்தி  பேசுவார்கள். அவர்கள் வாழ்த்தி பேசி முடித்ததும், மு.அப்பாவு அனைவருக்கும் நன்றி தெரிவித்து உரையாற்றுவார்.  இந்த நிகழ்ச்சிகள் முடிந்ததும் புதிய சபாநாயகர் ஆக உள்ள மு.அப்பாவு, துணை சபாநாயகராக கு.பிச்சாண்டியை போட்டியின்றி  தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பார்.

Related Stories: