ஆமை வேகத்தில் செயல்படும் மோடி அரசு: மக்களின் உயிர்களை காப்பாற்ற முயல் வேகத்தில் செயல்பட வேண்டும்: கே.எஸ். அழகிரி அறிக்கை

சென்னை: ஆமை வேகத்தில் செயல்படும் மோடி அரசு, இனியாவது முயல் வேகத்தில் செயல்பட்டு மக்களின் உயிர்களைக் காப்பாற்ற வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து, காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கை: தடுப்பூசி போடுவதில் உலக அளவில் இந்தியா மூன்றாவது இடத்தை பெற்றிருப்பதாக பாஜ அரசு தம்பட்டம் அடித்துக் கொள்கிறது. ஆனால், இந்தியாவில் 100 பேருக்கு  10.82 பேருக்கு தான் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பேராயுதமாகப் பயன்படுத்த வேண்டிய தடுப்பூசி மருந்தை வணிகமாக்கி ஏழை மற்றும் நடுத்தர மக்களின் உயிர்களோடு மத்திய அரசு விளையாடிக் கொண்டிருக்கிறது. ஆனால், மோடி அரசோ  எவ்வித வெளிப்படைத்தன்மையும் இன்றி அலட்சியமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. கொரானாவின் 2வது அலையில், குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

முதல் டோஸ் போட்டவர்களுக்கே இன்னும் இரண்டாவது டோஸ் போடவில்லை. இந்நிலையில், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு என்றைக்கு தடுப்பூசி போட்டு முடிக்கப் போகிறார்கள் என்ற அச்சம் கலந்த கேள்வி எழுகிறது. எனவே, கடந்த  கால ஆட்சியாளர்களின் அனுபவத்தை எடுத்துக் கொண்டு, கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும். ஆமை வேகத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் மோடி அரசு, இனியாவது முயல் வேகத்தில் செயல்பட்டு  மக்களின் உயிர்களைக் காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

பேரவை தலைவருக்கு வாழ்த்து

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  காங்கிரசில் அரசியல் பணியைத்  தொடங்கி, பிறகு திராவிட இயக்கத்தில் இணைந்து 4 ஆவது முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு  பெற்ற அப்பாவு, தமிழக சட்டப் பேரவைத் தலைவராகத் தேர்வு பெற்றிருப்பதை, வாழ்த்துகிறேன், வரவேற்கிறேன்.  நீண்ட அரசியல் அனுபவம் பெற்ற அப்பாவுவை   பேரவைத் தலைவராக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்வு செய்தது மிக,  மிக பொருத்தமானதாகும். தமிழக சட்டமன்றத்தில் உரிமைகளைப் பாதுகாத்து,  ஜனநாயக ரீதியான ஆரோக்கியமான விவாதத்துக்கு பெரும் துணையாக இருப்பார் என்கிற நம்பிக்கை அனைவருக்கும் இருக்கிறது. அதேபோல, சட்டப்பேரவை  துணைத் தலைவராக தேர்வு பெற்றுள்ள அனுபவமிக்க பிச்சாண்டியையும் வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  

Related Stories:

>