தமிழகத்தில் 69 ஆண்டுகளுக்கு பிறகு முடிவுக்கு வந்த ஆங்கிலோ இந்தியன் பிரதிநிதித்துவம்

சென்னை: தமிழக சட்டப் பேரவையில் 69 ஆண்டுகளாக ஆங்கிலோ இந்தியன் வகுப்பினருக்கு அளிக்கப்பட்ட பிரதிநிதித்துவம் முடிவுக்கு வந்துள்ளது. தமிழக சட்டப்பேரவையில் 1952-ம் ஆண்டு முதல் இதுவரை 10 ஆங்கிலோ இந்தியன்  பிரிவைச் சேர்ந்தவர்கள் பிரதிநிதிகளாக இருந்துள்ளனர். இவர்களில் 3 பேர் ஆண்கள் மற்றும் 7 பெண்கள் ஆவார்கள். தமிழக சட்டப்பேரவையில் பல ஆண்டுகளாக ஆங்கிலோ இந்தியன் வகுப்பினருக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டு வந்த  நிலையில், கடந்த அதிமுக ஆட்சியின் போது தமிழக சட்டசபையிலும், நாடாளுமன்றத்திலும் ஆங்கிலோ இந்தியன் பிரதிநிதித்துவம் தொடர்பாக சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து கடந்த சட்டப் பேரவையுடன் ஆங்கிலோ  இந்தியன் வகுப்பினருக்கு பிரதிநிதித்துவம் முடிவடைந்துவிட்டது. இந்நிலையில், இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தில் 69 ஆண்டுகளுக்கு பிறகு மத்திய அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தத்தின்படி ஆங்கிலோ இந்தியன் நியமன உறுப்பினர்  இல்லாமல் கூடியுள்ள முதல் சட்டப் பேரவையாகும்.

இந்திய அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டபோது, நாட்டில் ஆங்கிலோ இந்தியன் வகுப்பினர் அதிகம் இருந்தனர். எனவே இந்த வகுப்பினருக்காக அவர்களில் இருந்து ஒருவரை சட்டசபையின் உறுப்பினராக கவர்னரே நியமிக்கலாம் என்று  அரசியல் சாசனத்தில் அனுமதி அளிக்கப்பட்டது. ஆரம்பத்தில் அந்த சாசனத்தில், மாநில ஆளுநர் விரும்பும் எண்ணிக்கையில் ஆங்கிலோ இந்தியன் உறுப்பினர்களை நியமித்துக் கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.  சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொடுக்கப்படும் அதே சம்பளம் நியமன எம்எல்ஏக்களுக்கும் கொடுக்கப்பட்டு வருகிறது. சட்டசபையில் அவர்கள் பேசுவதற்கு நேரம் ஒதுக்கப்படுகிறது. அவர்கள் தங்களின் வகுப்பினருக்கு தேவையான  கோரிக்கைகளை முன்வைக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது. எனினும், அவையில் நடக்கும் வாக்கெடுப்புகளில் மட்டும் அவர்கள் பங்கேற்க முடியாது. அப்போதெல்லாம் அவர்கள் அவைக்கு வெளியே அனுப்பப்படுவார்கள் என்பது குறிப்பிடதக்கது.

Related Stories: