கொரோனாவால் பலியானவர்களையும் விட்டு வைக்காத மோசடி கும்பல் அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்து வாங்க முயன்ற 3 பேர் கைது

இறந்தவர் பெயரில் பரிந்துரை கடிதம் கொடுத்த டாக்டரிடம் போலீசார் விசாரணை

சென்னை: இறந்த கொரோனா நோயாளியின் மருந்து சீட்டை வைத்து வைத்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்து வாங்க முயன்ற கார் டிரைவர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். கொரோனாவால்  நுரையீரல் தொற்று ஏற்பட்ட நோயாளிகளுக்கு தமிழக அரசு சார்பில் ரெம்டெசிவிர் மருந்து குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த மருந்து தமிழ்நாடு மருந்து சேவைகள் கழகம் சார்பில் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு,  நோயாளியின் பெயர், மருத்துவமனை விவரம், நோயாளியின் ஆதார் அட்டை மற்றும் நோயாளிக்கு டாக்டர்கள் கொடுத்த பரிந்துரை கடிதம் இருந்தால் மட்டுமே டெம்டெசிவிர் மருந்து வழங்கப்படுகிறது. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில்  உள்ள தமிழ்நாடு மருந்து சேவைகள் கழகத்தில் உள்ள மருந்தகத்தில் உரிய ஆவணங்களை மருந்தக ஊழியர்களிடம் காண்பித்து ரெம்டெசிவிர் மருந்தை குறைந்த விலைக்கு பல்வேறு மாவட்ட மக்கள் வாங்கிச் செல்கின்றனர்.

அந்த வகையில் நேற்று காலை டெம்டெசிவிர் மருந்து வாங்க கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் உறவினர்கள் வரிசையில் நின்று வாங்கி கொண்டிருந்தனர். அப்போது செல்வம் என்ற நோயாளிக்கு 3 பேர் தனித்தனியாக  டெம்டெசிவிர் மருந்து வாங்க ஒரே மருத்துவர் பரிந்துரைக்கடிதங்கள் மற்றும் நோயாளியின் ஆதார் அட்டை நகலைகளை காட்டி முறைகேடாக மருந்து வாங்க முயன்றனர். வழக்கமாக ஒரு நோயாளிக்கு ஒரு முறை மட்டுமே ரெம்டெசிவிர்  மருந்து வழங்கப்படுகிறது.  இதை கவனித்த கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உள்ள மருந்தாளுநர்கள் சம்பவம் குறித்து கீழ்ப்பாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி விரைந்து வந்த போலீசார் 3 பேரையும் பிடித்து விசாரணை  நடத்தினர். அதில், அம்பத்தூரை சேர்ந்த கார் டிரைவர் சதீஷ்குமார்(34), அயனாவரத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி கிருஷ்டி பால்(34). மாதவரத்தை சேர்ந்த செல்வகுமார்(33) என தெரியவந்தது.

இவர்கள் மூன்று பேரும் தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர் அரவிந்தன் என்பவர் கொடுத்த பரிந்துரைக்கடிதத்தின் படி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் முறைகேடாக ரெம்டெசிவிர் மருந்து வாங்க  வந்தது தெரியவந்தது. மேலும், கொரோனா தொற்றால் உயிரிழந்த செல்வம் என்பவரின் பெயரில் டாக்டர் பரிந்துரைப்படி மருந்து வாங்க வந்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். அவர்கள் அளித்த  தகவலின் படி உயிரிழந்த நோயாளி பெயரில் பரிந்துரைக்கடிதம் வழங்கிய டாக்டர் அரவிந்தனிடம் தஞ்சை போலீசார் உதவியுடன் கீழ்ப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் கீழ்ப்பாக்கம் அரசு  மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: