2ம் வகுப்பு மாணவி எழுதிய கடிதத்துக்கு உடனடி நடவடிக்கை அரசு பள்ளியை சீரமைக்க அமைச்சரை அனுப்பி முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை:பள்ளி வளாகத்தை பார்வையிட்டார் : மக்கள் மகிழ்ச்சி

சென்னை: பொன்னேரியை சேர்ந்தவர் பாஸ்கரன். வழக்கறிஞர். இவரது மகள் அதிகை முத்தரசி (7). இவர், பொன்னேரியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் பாஸ்கரன், மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய  தொடக்கப்பள்ளி கட்டிடத்தை சீரமைக்க வேண்டுன்று 2019ம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 2020ம் ஆண்டு பள்ளியை சீரமைக்கவேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனால் ஒரே ஒரு சுவர் மட்டும் கட்டி  வண்ணம் தீட்டி அப்படியே விட்டுவிட்டனர். இந்நிலையில் பள்ளியை சீரமைக்ககோரி தமிழக முதல்வருக்கு முத்தரசி, ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். அதன்படி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்று  முடிந்தபிறகு பள்ளி கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை உடனடியாக பள்ளிக்குசென்று ஆய்வு செய்யும்படி உத்தரவிட்டார்.  

இதனைத்தொடர்ந்து நேற்று மதியம் 3 மணி அளவில் பள்ளி கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட கலெக்டர் பொன்னையா ஆகியோர் பொன்னேரி சிவன்கோவில் அருகே உள்ள மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய அரசு  தொடக்கப்பள்ளிக்கு வந்தனர். தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதிய பள்ளி மாணவி மற்றும் தந்தை ஆகியோரை நேரில் அழைத்துச் சென்று அரசுக்கு சொந்தமான பள்ளி நிலத்தை பார்வையிட்டனர். மேலும் அந்த பகுதியில் இருந்த மதில் சுவரை  அகற்ற உத்தரவிட்டார். மேலும் பள்ளிக்கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். தொடர்ந்து இதைக்கேட்ட அப்பகுதி மக்கள், மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர். அப்போது கல்வித்துறை அதிகாரிகள், பொன்னேரி  சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் துரை சந்திரசேகர், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டிஜேகோவிந்தராசன், முன்னாள் எம்எல்ஏ சிஎச்.சேகர் உள்பட பலர் இருந்தனர்.

Related Stories: