அரசு மருத்துவமனைகளில் மதிய வேளையில் நோயாளிகள், உதவியாளர்களுக்கு ஒரு லட்சம் உணவு பொட்டலம்

*  இன்று முதல் அமலுக்கு வருகிறது

* அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவிப்பு

சென்னை: தமிழக  இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் மூலம் உணவுப் பொட்டலங்கள் மற்றும் கபசுர குடிநீர் வழங்குவது குறித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள அறநிலையத்துறை  ஆணையர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர் பி.கே.சேகர் பாபு பேசியதாவது: இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் சுமார் 38,661 கோயில்கள் உள்ளன. இவற்றில் 754 கோயில்களில் அன்னதானத்திட்டம்  செயல்படுத்தப்பட்டு வருகிறது. அன்னதானத் திட்டம் செயல்பாட்டில் உள்ள கோயில்கள் வாயிலாக சமூக இடைவெளி பின்பற்றபட்டு ஒவ்வொரு நாளும் சுமார் 45,200 பேருக்கு உணவு பொட்டலங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.  தற்போதுள்ள முழு ஊரடங்குக் காலத்தில் அனைத்து கோயில்களில், அன்னதானம் வழங்குவதும் நிறுத்தப்படாமல் தொடர்ந்து உணவு பொட்டலங்களாகப் பொதுமக்கள் மற்றும் குடிசை பகுதியில் வசிப்பவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.  கொரோனா நோய் பாதிப்பு குறையும் வரை பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தேவைக்கேற்ப உணவு பொட்டலங்கள் உயர்த்தி வழங்க, இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது.

அதன்படி ஒரு லட்சம் பேருக்கு ரூ.30 லட்சம் செலவில் இந்து சமய அறநிலையத்துறை மூலம் மதிய உணவு வழங்கப்படும்.  இந்த உணவு பொட்டலங்கள் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகள்,  உதவியாளர்களுக்கு வழங்கப்படும். அதேபோல இந்து சமய அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ள கோயில் மருத்துவமனைகள் மற்றும் சித்த மருத்துவமனைகளில் கபசுர குடிநீர் மற்றும் முகக்கவசம் இலவசமாக வழங்கவும் நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்வுகள் இன்று முதல் அமலுக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொண்டுள்ளோம். இதுவரையில் அறநிலையத்துறை தமிழக வரலாற்றில் இல்லாத அளவுக்கு தமிழக முதல்வர் வழிகாட்டுதலின்படி சிறப்பாக  ெசயல்பட்டு அனைவரது புருவத்தை உயர்த்தி பார்க்கும் வகையில் செயல்பாட்டில் ஜொலிக்கும் என்ற நம்பிக்கையில் எங்களது பயணத்தை தொடங்கியுள்ளோம், என்றார்.

Related Stories: