கொரோனா பரவலை தடுக்க மருத்துவ அவசர நிலையை அமல்படுத்தக்கோரி வழக்கு

மதுரை :மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கே.கே.ரமேஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: கொரோனா நோய் தொற்று உலகையே அச்சுறுத்தி வருகிறது. டெல்லி, மும்பை, பெங்களூரூ உள்ளிட்ட நாட்டின் முக்கிய  நகரங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. இதனால் 60 சதவீத மக்கள் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தொடர் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் பெரும்பாலானோரின் வாழ்வாதாரத்தை முடக்கியுள்ளது. இந்தியாவை பொறுத்தவரை  இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 2 கோடிக்கும் அதிகமானோர் பாதித்துள்ளனர். ஆக்சிஜன், மருந்துகள் உள்ளிட்டவைக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தற்போது இரண்டாம் அலை உருமாறி தாக்கி வருகிறது.  கடுமையான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டால் தான் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும். பல மாநிலங்கள் சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றன.

ஆக்சிஜன் கிடைக்காமல் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன.  மருத்துவத்துறையும், மருந்து நிறுவனங்களும், மருத்துவமனைகளும் மத்திய அரசின் விதிகளுக்கு உட்பட்டே செயல்படுகின்றன. முன்களப் பணியாளர்கள் அர்ப்பணிப்புடன்  பணியாற்றும் நிலையில், மருத்துவ அவசர நிலை பிறப்பித்தால் மட்டுமே பரவலை கட்டுப்படுத்த முடியும். எனவே, கொரோனா பரவலை தடுத்திட உடனடியாக நாடு தழுவிய மருத்துவ அவசர நிலையை அறிவிக்குமாறும், மருந்து மற்றும்  ஆக்ஸிஜன் தயாரிப்பை மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

‘கொரோனாவால் நடத்த முடியவில்லை’ சேலத்தில் தனியார் பள்ளிக்கு மூடுவிழா: பெற்றோர் முற்றுகை

Related Stories: