பாதிப்பு குறைவு; பலி அதிகரிப்பு: வீழ்ச்சியை நோக்கி கொரோனா

புதுடெல்லி: இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து 2வது நாளாக சரிவை நோக்கி செல்கிறது. பலி எண்ணிக்கை சற்று உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா 2வது அலை மே மாத நடுவில் இருந்து படிப்படியாக சரியத் தொடங்கும் என நிபுணர்கள் கூறியிருந்தனர். அதன்படி, பல மாநிலங்களில் ஊரடங்கு போடப்பட்டதைத் தொடர்ந்து, தினசரி பாதிப்பு 4 லட்சத்தில் இருந்து சரியத் தொடங்கி உள்ளது. நேற்று முன்தினம் தினசரி பாதிப்பு 3.66 லட்சமாக இருந்த நிலையில் நேற்று 3.29 லட்சமாக குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் பலி குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று காலை 8 மணிக்கு வெளியிட்ட புள்ளிவிவரத்தில், ஒரே நாளில் 3 லட்சத்து 29 ஆயிரத்து 942 பேர் புதிதாக வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 2 கோடியே 29 லட்சத்து 92 ஆயிரத்து 517 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் தினசரி பாதிப்பு சரிவை நோக்கி இருப்பதாக சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

மேலும் நேற்று ஒரே நாளில் 3,876 பேர் பலியாகி உள்ளனர். நேற்று முன்தினம் 3,754 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. மொத்த பலி 2 லட்சத்து 49 ஆயிரத்து 992 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்ை 37 லட்சத்து 15 ஆயிரத்து 221 ஆக உள்ளது. இதுவரை தினசரி பாதிப்பு, பலி எண்ணிக்கை மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்தில் இருந்த நிலையில், கர்நாடகா அதை முந்தி உள்ளது. கர்நாடகாவில் நேற்று ஒரே நாளில் 596 பேர் பலியாகி உள்ளனர். மகாராஷ்டிராவில் 549 பேர் இறந்துள்ளனர். கர்நாடகாவில் நிலைமை தொடர்ந்து மோசமான நிலையில் இருக்கிறது.

தெலங்கானாவில் இன்று முதல் 10 நாள் ஊரடங்கு

தெலங்கானாவில் மொத்த பாதிப்பு 5 லட்சத்தை கடந்துள்ள நிலையில், இன்று முதல் 10 நாட்களுக்கு முழு ஊரடங்கை அம்மாநில அரசு பிறப்பித்துள்ளது. முழு ஊரடங்கு என்றாலும் காலை 6 மணி முதல் 10 மணி வரை பல்வேறு நடவடிக்கைகளுக்கு கட்டுப்பாடு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இதே போல நாகலாந்தில் வரும் 14ம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுகிறது.

Related Stories: