டெல்லி போராட்ட களத்தில் புதிய வேளாண் சட்டத்தோடு கொரோனாவையும் எதிர்த்து போராடும் விவசாயிகள்

புதுடெல்லி: மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் டெல்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 8 மாதமாக போராட்டம் நடந்து வரும் நிலையில், டெல்லியில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகின்றது.  எனினும் பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் சிங்கு, திக்ரி மற்றும் கசிப்பூர் எல்லையில் தங்களது போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். கொரோனா நோய் தொற்று வராமல் தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் இங்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.  பாரத் கிசான் சங்கத்தை சேர்ந்த ரூப் சிங் கூறுகையில், “ திக்ரி எல்லையில்  போராட்டக்களத்தில் இருந்து 17 கி.மீ தொலைவிற்கு கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவாமல் தடுப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு முககவசம், சானிடைசர் வழங்கப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் அரசு எங்களுக்கு எந்த வகையிலும் ஆதரவு தரவில்லை. ” என்றார்.

விவசாய சங்க தலைவர் அபிமன்யூ கோஹர் கூறுகையில், “சிங்கு எல்லையில் ஒவ்வொரு பகுதியும் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்படுகின்றது. விவசாயிகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக “கதா” நீர் தயாரித்து தினசரி வழங்கப்பட்டு வருகின்றது. இலவச கொரோனா தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  விருப்பமுள்ளவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்” என்றார்.  கதா நீர் என்பது ஏலக்காய், கிராம்பு, மிளகு, பட்டை, துளசி, இஞ்சி, மஞ்சள், வெல்லம் சேர்த்து தயாரிக்கப்படும் கசாயமாகும்.

Related Stories:

>