நெல்லூரில் தனியார் கெமிக்கல் தொழிற்சாலையில் விஷவாயு கசிந்து 3 தொழிலாளர்கள் பலி: 4 பேர் கவலைக்கிடம்

திருமலை: நெல்லூரில் உள்ள தனியார் கெமிக்கல் தொழிற்சாலையில் விஷவாயு கசிந்து 3 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர். 4 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், வின்ஜாமுரு மண்டலம், சந்திரபாடியாவில் தனியார் எரிசக்தி கெமிக்கல் தொழிற்சாலை உள்ளது. இங்கு நேற்று திடீரென அம்மோனியா விஷ வாயு கசிந்ததால் அதிக அளவு புகை மற்றும் தீ ஏற்பட்டது.   இதில், சிக்கிய வின்ஜாமூரைச் சேர்ந்த பி.னு,  எஸ்.கே.ஷரீப் சவுட்டா பீமாவரத்தைச் சேர்ந்த திருப்பதய்யா உள்ளிட்ட 3 தொழிலாளர்கள் கண்எரிச்சல் மற்றும் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டு பரிதாபமாக சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும், 4 தொழிலாளர்கள் உடல் நிலை கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனை பார்த்த அங்கிருந்த மற்ற தொழிலாளர்கள் அவர்களை மீட்டு உள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது, தொழிற்சாலை நிர்வாகம் சில தொழிலாளர்களின் அலட்சியமே இந்த விஷ வாயு கசிவுக்கு காரணமாக  அமைந்ததாக தெரிவித்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தொழிற்சாலையில் பல விபத்துக்கள் நிகழ்ந்தாலும் கூட பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும், கடந்த ஜுலை மாதமும் கொதிகலன் வெடித்ததில் தொழிலாளர் ஒருவர் உயிரிழந்தார். 4 பேர் படுகாயம் அடைந்தனர் என்று தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>