கேரளாவின் தேவை அதிகரிப்பதால் தமிழ்நாட்டுக்கு ஆக்சிஜன் அனுப்ப முடியாது: பிரதமருக்கு முதல்வர் பினராய் விஜயன் கடிதம்

திருவனந்தபுரம்: கேரளாவில் ஆக்சிஜன் தேவை அதிகரித்து வருவதால் தமிழ்நாடு உள்பட பிற மாநிலங்களுக்கு ஆக்சிஜன் அனுப்பி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பி இருப்பதாக முதல்வர் பினராய் விஜயன் கூறினார்.

கேரள முதல்வர் பினராய் விஜயன் கூறியதாவது: கேரளாவில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது கேரளாவில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டி உள்ளது. இது வரும் 15ம் தேதிக்குள் 6 லட்சமாக உயர வாய்ப்பு உண்டு. இந்த சூழ்நிலையில் கேரளாவில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் தமிழ்நாடு உள்பட வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பிரதமருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. கேரளாவில் தற்போது தினமும் 219 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதில் இருந்து தமிழ்நாடு கர்நாடகா மாநிலங்களுக்கு ஆக்சிஜன் அனுப்பி வைக்கப்பட்டு வந்தது. தமிழ்நாட்டுக்கு தினமும் 40 டன் ஆக்சிஜன் அனுப்பி வைக்கப்பட்டது. நோயாளிகளின் எண்ணிக்கை 6 லட்சமாக அதிகரித்தால் கேரளாவுக்கு தினம் 450 டன் ஆக்சிஜன் தேவைப்படும். எனவே கேரளாவுக்கு கூடுதல் ஆக்சிஜன் அனுப்பி வைக்க வேண்டும் என பிரதமருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: