சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு இந்த நிதியாண்டில் முதலீட்டு மானியம் வழங்க ரூ.280 கோடி ஒதுக்கீடு

சென்னை: சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு இந்த நிதியாண்டில் முதலீட்டு மானியம் வழங்க ரூ.280 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொழில், வர்த்தகத்துறையினரின் கருத்துக்களின் பேரில் முடிவுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதில் 60% தொகையாக ரூ.168 கோடி உடனடியாக நிறுவனங்களுக்கு விடுவிக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதன் மூலம் நிலுவையில் உள்ள தகுதியான அனைத்து நிறுவனங்களுக்கும் மானியம் கிடைக்க வழிவகை செய்யப்படும்.

ஆட்டோ ரிக்க்ஷா, டாக்சிக்கு சாலை வரிக்கட்டணம் செலுத்த 3 மாதம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. சிட்கோ நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய மனைவிலை, தவணை, வாடகை செலுத்த மேலும் 6 மாதம் அவகாசம் அளிக்கப்படுகிறது.

வங்கிக்கடன் பெறும்போது செலுத்தவேண்டிய முத்திரைத்தாள் பதிவுக்கட்டணம் செலுத்துவதில் டிசம்பர் 21 வரை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சிறு, குறு தொழில் நிறுவனங்கள், ஆட்டோ, கால்டாக்சி ஓட்டுனர்கள் இஎம்ஐ கட்டுவதற்கு கால நீட்டிப்பு வழங்க வலியுறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே மாதத்தில் காலாவதியாகும் ஆட்டோ, கால்டாக்சி வாகனங்களுக்கான காப்பீடு செலுத்த கால நீட்டிப்பு வழங்க மத்திய அரசுக்கு வலியுறுத்தப்படும். பெரிய, சிறிய தொழில்நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் தொழில் வரிக்கு மூன்று மாதம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

தொடர் உற்பத்தி ஆலைகள், அத்தியாவசிய பொருள் உற்பத்தி ஆலைகளின் சிக்கல்களை களைய சேவை மையம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னையிலுள்ள தொழில் வழிகாட்டி மைய அலுவலகத்தில் சேவை மையம் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 96771-07722, 99943-39191, 78239-28262 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

முழு ஊரடங்கு காலத்தில் பழக்கடைகள், நாட்டு மருந்து கடைகளும் இயங்கலாம் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. முழு ஊரடங்கு காலத்தில் தொழிற்சாலைகளில் பிற பராமரிப்பு பணிகளை ஒருநாள் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. குறைந்த அளவிலான பணியாளர்களுடன் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

Related Stories:

>