ஊரடங்கால் வேலையின்றி தவிப்பு; மனைவி, மகனை கொன்று தொழிலாளி தற்கொலை: மகாராஷ்டிராவில் சோகம்

புனே: மகாராஷ்டிராவில் வேலையின்றி தவித்த தொழிலாளி, தனது மனைவி மற்றும் மகனை கொன்றுவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனே அடுத்த லோனி கலாபூர் பகுதியைச் சேர்ந்த தொழிலாளி ஹனுமந்த ஷிண்டே (38). இவர், கடந்த பல மாதங்களாக கொரோனா ஊரடங்கின் எதிரொலியாக வேலையின்றி சிரமப்பட்டு வந்தார். பல நாட்கள் பட்டினியில் கிடந்துள்ளார். இதனால், மனமுடைந்த அவர் மனைவி பிரக்யா (28) மற்றும் மகன் சிவ்தேஜ் (1) ஆகியோரை காப்பாற்ற முடியாமல் தவித்து வந்தார். இறுதியாக மனைவியையும், மகனையும் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொள்ள திட்டமிட்டார்.

அதற்காக, நேற்று முன்தினம் இரவு மனைவி மற்றும் மகனை கூர்மையான கத்தியால் குத்தி கொன்றுவிட்டு, ஹனுமந்த ஷிண்டே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, லோனி கலாபூர் போலீஸ் அதிகாரி ராஜேந்திர மோக்ஸி கூறுகையில், ‘ஹனுமந்த ஷிண்டேவின் குடும்பம், சோலாப்பூரில் உள்ளது. வேலை தேடி அவர் தனது குடும்பத்துடன் கடந்த ஆண்டு கடம்வாட் டவுன்ஷிப் பகுதிக்கு இடம்பெயர்ந்தார். ஊரடங்கால் ஏற்பட்ட வேலையின்மை காரணமாக குடும்பம் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. அதனால், மனைவி மற்றும் மகனை கூர்மையான ஆயுதத்தால் கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு, ஹனுமந்தாவும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஹனுமந்தாவின் தந்தை தரியப்பா கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) 302 (கொலை)  மற்றும் 309 (தற்கொலை முயற்சி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு  செய்யப்பட்டுள்ளது. மூன்று பேரின் சடலங்களை கைப்பற்றி மேலும் விசாரணை நடந்து வருகிறது’ என்றார்.

Related Stories: