சேரன்மகாதேவி சுடுகாட்டில் அடிப்படை வசதி மேம்படுத்தப்படுமா?.. பொதுமக்கள் எதிர்பார்ப்பு

வீரவநல்லூர்: சேரன்மகாதேவி சுடுகாட்டில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என ெபாதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். சேரன்மகாதேவி பேரூராட்சியில் சுமார் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் அடிப்படை தேவைக்காக தாமிரபரணி ஆற்றங்கரையில் ஆற்றுப்பாலத்தின் கீழ்புறம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சுடுகாடு வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. பெயரளவில் மட்டுமே அப்பகுதியில் சுடுகாடு அமைந்துள்ளது. ஆனால் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாதததால் இறுதி சடங்கு நிகழ்ச்சிக்கு வருபவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

சுடுகாட்டில் அடிப்படை தேவையான தண்ணீர் வசதி இல்லாததால் துக்க நிகழ்ச்சிக்கு வருபவர்கள் குடங்களுடன் ஆற்றுக்கும் அப்பகுதியில் உள்ள நீரேற்று நிலையத்திலிருந்து வெளியேறும் தண்ணீர் வால்வு பகுதிக்கும் அலைய வேண்டிய நிலை உள்ளது. தகன மேடை அருகிலேயே தண்ணீர் வசதிக்காக அடிபம்பு மற்றும் மோட்டார் பொருத்தப்பட்ட அறை வசதி இருந்தும் பல ஆண்டுகளாக பயன்பாடில்லாமல் இருப்பதால் பொதுமக்கள் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் ஆற்றங்கரையோரம் உள்ள இடங்களை தனிநபர்கள் ஆக்கிரமித்து விளைநிலங்களாக மாற்றி இருப்பதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

மேலும் பல ஆண்டுகளாக தகன மேடை அருகே மண் அள்ளப்படாததால் அப்பகுதியில் மண் நிறைந்து மேற்கூரை பொதுமக்கள் தலையில் தட்டி பலர் காயமடைந்துள்ளனர். எனவே பேரூராட்சி நிர்வாகத்தினர் விரைந்து நடவடிக்கை எடுத்து  சேரன்மகாதேவி சுடுகாட்டில் நிரந்தரமாக தண்ணீர் வசதி ஏற்படுத்தி தருவதோடு அப்பகுதியில் கூடுதல் மின்விளக்குகள் அமைத்து இரவு நேரங்களில் இறுதிசடங்கிற்க்காக வருபவர்களுக்கு பாதுகாப்பு வசதி செய்துதர வேண்டும் என அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: