கடையத்தில் கொள்முதல் செய்யாததால் மழையில் நனைந்து முளைத்த நெல் மூட்டைகள்

கடையம்: கடையத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் கொண்டு வந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாததால் மழையில் நனைந்து முளைவிட்டன. இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் கடையம் வட்டாரத்தில் ராமநதி அணைப் பாசனத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயம் நடைபெற்று வருகிறது. கடந்த பிசான சாகுபடியில் நெல் பயிரிட்ட விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைந்த நெல்லை தனியாரிடமும், அறுவடை காலங்களில் அமைக்கப்படும் தற்காலிக அரசு கொள்முதல் நிலையங்களிலும் விற்பனை செய்வர்.

கடையம் சந்தையில் அமைக்கப்பட்ட தற்காலிக அரசு கொள்முதல் நிலையத்தில் பல விவசாயிகள் தங்கள் வயலில் விளைந்த நெல்லை கடந்த பிப்ரவரி மாதம் முதல் கொண்டு வந்து விற்பனை செய்தனர். இந்நிலையில் மார்ச் மாதத்தில் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்த நெல் மூட்டைகளை அரசு அதிகாரிகள் முறையாக கொள்முதல் செய்யாமல் அலட்சியமாக இருந்ததால் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைவிட்டுள்ளன. அரசு அதிகாரிகள் காட்டிய அலட்சியத்தால் 50 நாள்களுக்கும் மேல் கொள்முதல் செய்யப்படாமல் நெல் முளை விட்டதால் விவசாயிகள் பெரும் இழப்பிற்குள்ளாகி உள்ளனர்.

இதுகுறித்து விவசாயி சுரேஷ் கூறும்போது, கடையம் பகுதியில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் சொந்த நிலங்களிலும், குத்தகை நிலங்களிலும் விவசாயம் செய்து வருகின்றனர். கடையம் பகுதியில் விளையும் நெல்லை கொள்முதல் செய்வதற்கு கடையம் சந்தையில் அரசு கொள்முதல் நிலையம் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளது. இங்கு விற்பனை செய்வதற்காக மார்ச் மாதத்தில் கொண்டு வந்த நெல் மூட்டைகளை கொள்முதல் செய்து கொள்கிறோம் என்று அதிகாரிகள் கூறிய நிலையில் 40 நாள்களுக்கும் மேலான நிலையில் கொள்முதல் செய்யாமல் இழுத்தடித்தனர். மேலும் கொள்முதல் நிலையத்தை மூடப் போகிறோம்.

தங்கள் நெல் மூட்டைகளை எடுத்துச் செல்லுங்கள் என்று கூறினர். இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்ட போது நெல் தரமானதாக இல்லை என்று கூறி முறையாக பதில் கூறவில்லை. 40 நாள்களுக்கு மேலான நிலையில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் கோடை மழையில் நனைந்த நெல் மூட்டைகள் முளைவிட்டு வீணாகி விட்டன. பல பருவங்களாக முறையான மழை, தண்ணீர் இல்லாமல் விவசாயம் பொய்த்துப் போன நிலையில் விளைந்த நெல்லை அதிகாரிகள் அலட்சியமாக கொள்முதல் செய்ய முடியாது என்று சொல்வதால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. அரசு உரிய நடவடிக்கை எடுத்து இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.

Related Stories:

>