ஊரடங்கால் பயணிகள் எண்ணிக்கை குறைந்தது: சென்னையில் 126 விமானங்கள் ரத்து

மீனம்பாக்கம்: கொரோனா வைரஸ் 2வது அலையை கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் நேற்று முதல் வரும் 24ம் தேதி வரை அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் மக்கள் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். உள்நாட்டு விமான பயணிகள், அவசர வேலைகளுக்காக பயணிக்கலாம் என்று விதிவிலக்கு அளித்துள்ளது. ஆனாலும் பெரும்பாலானோர் பயணத்தை தவிர்த்தனர். இதனால் பயணிகள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து, விமானங்களும் பெருமளவு ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று பெருமளவு குறைந்துள்ளது. சென்னையில் இருந்து இன்று 38 புறப்பாடு உள்நாட்டு விமானங்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.

அதில் 2,400 பயணிகள் மட்டுமே பயணிக்கின்றனர். சென்னைக்கு வரும் உள்நாட்டு விமானங்கள் 40 இயக்கப்பட்டு, 1,300 பேர் மட்டுமே பயணிக்கின்றனர். அதே நேரத்தில் போதிய பயணிகள் இல்லாமல் 126 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதில் வெளி மாவட்டங்கள், மாநிலங்களுக்கு செல்லும் விமானங்கள் 62, சென்னைக்கு வரும் விமானங்கள் 64. சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இன்று 2 வந்தே பாரத் விமானங்கள், 6 சிறப்பு விமானங்கள் என மொத்தம் 8 விமானங்கள் மட்டுமே வருகின்றன. அதிலும் அமெரிக்காவின் சிகாகோ நகரில் இருந்து டெல்லி வழியாக சென்னை வரும் ஏர்இந்தியா விமானத்தில் 8 பயணிகள் மட்டுமே வருகின்றனர்.

இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் விதத்தில் போடப்பட்டுள்ள முழு ஊரடங்கை மதித்து பொதுமக்கள், தங்கள் விமான பயணங்களை தள்ளி வைத்துள்ளனர். இதனால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டு விமான நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது. வைரஸ் பரவல் குறைய தொடங்கியதும், ஊரடங்கில் தளர்வுகள் வந்ததும் மீண்டும் பயணிகள் எண்ணிக்கையும் அதிகரித்து விமானங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். விமான நிலையம், மீண்டும் பழைய சகஜ நிலைக்கு திரும்பும்’ என்றனர்.

Related Stories: