சிங்கப்பூரிலிருந்து ஆந்திராவிற்கு ஆக்சிஜன் டேங்கர்கள் போர்க்கப்பலில் வருகை

திருமலை: நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதில் பாதிக்கப்பட்டு ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். நோயாளிகளின் உயிரிழப்பை தவிர்க்க முக்கிய பங்கு வகிக்கும் ஆக்சிஜன் பற்றாக்குறையை சமாளிக்க மத்திய அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து அதிக திறன் கொண்ட டேங்கர்களை வாங்குகிறது. இதுதொடர்பாக, மத்திய அரசு அந்த நாடுகளுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின் விளைவாக ‘கிரையோஜெனிக் ஆக்சிஜன்’ டேங்கர்கள் கொண்டு வரப்படுகிறது. விமானங்களிலிருந்து வந்த ஆக்சிஜன் இப்போது வெளிநாட்டிலிருந்து கப்பல்களில் இறக்குமதி செய்யப்படுகிறது.

இதற்கு மத்திய அரசு ஆக்ஸிஜன் சமுத்திரசேது-2 என்று பெயரிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக ஆக்ஸிஜன் டேங்கர்களை ஏற்றிச்செல்லும் போர்க்கப்பல்கள் சிங்கப்பூரிலிருந்து ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திற்கு கடல் வழியாக நேற்று வந்தன. இதுவரை சிங்கப்பூரிலிருந்து விசாகப்பட்டினத்திற்கு 8 கிரையோஜெனிக் ஆக்ஸிஜன் டேங்கர்கள், 3,898 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மற்றும் பிற மருத்துவ உபகரணங்களை ஏற்றிய கப்பல்கள் வந்துள்ளன. கடந்த 5ம் தேதி சிங்கப்பூரிலிருந்து புறப்பட்ட ஐஎன்எஸ் ஐராவத் போர்க்கப்பல் விசாகப்பட்டினம் துறைமுகத்திற்கு நேற்று வந்தது.

மேலும், வளைகுடா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள நட்பு நாடுகளிலிருந்து மருத்துவ திரவ ஆக்சிஜன் மற்றும் மருத்துவ உபகரணங்கள் கொண்டு வரப்படவுள்ளது.

Related Stories: