புஞ்சை புளியம்பட்டி சோதனைச்சாவடியில் வாகன தணிக்கை செய்யாமல் பொழுதுபோக்கிய போலீசார்

சத்தியமங்கலம்: முழு ஊரடங்கின்போது 3 மாவட்ட எல்லையில் உள்ள சோதனைச்சாவடியில் வாகன தணிக்கை மேற்கொள்ளாமல் பேப்பர் படித்தபடி ஜாலியாக போலீசார் பொழுதுபோக்கிய சம்பவம் சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழக அரசு கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முதல் மே 24-ம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சாலையில் தேவையில்லாமல் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்வோரை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு எச்சரிப்பதோடு தேவையில்லாமல் சுற்றித் திரிபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஈரோடு மாவட்டம்  புஞ்சை புளியம்பட்டியில் ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட எல்லையில் அமைந்துள்ள புஞ்சை புளியம்பட்டி டானாபுதூர் காவல்துறை சோதனைச்சாவடியில் நேற்று பணியில் இருந்த போலீசார் ஊரடங்கின்போது தேவையில்லாமல் சுற்றித்திரிந்த வாகன ஓட்டிகளை பற்றி எந்தவித கவலையும் இல்லாமல் சோதனைச்சாவடியில் நாளிதழ் படித்தபடி ஜாலியாக பொழுதை போக்கினர்.

அந்த வழியே சென்ற எந்த வாகனத்தையும் போலீசார் தடுத்து நிறுத்தாமல் பணியில் இருந்த 3 போலீசாரும் சோதனைச் சாவடி முன்பு நின்றபடி எந்தவித பணியை மேற்கொள்ளாமல் வாகனங்களில் செல்பவர்களை பற்றி கவலைப்படாமல் ஜாலியாக பொழுது போக்கிய சம்பவம் புஞ்சைபுளியம்பட்டி பகுதி பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட போலீசார் மீது மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என புஞ்சை புளியம்பட்டி பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: