முழு ஊரடங்கு சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்தது: தேவையின்றி வெளியே சுற்றியவர்களை எச்சரித்த போலீஸ்

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் கொரோனா முழு ஊரடங்கினையொட்டி சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நேற்று முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும் வகையில் காலை முதல் மதியம் 12 மணி வரை காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள் திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்ததையடுத்து பொதுமக்கள் நடமாட்டம் சாலைகளில் மிகவும் குறைந்து காணப்பட்டது.

மளிகை மற்றும் காய்கறி கடைகளுக்கு மதியம் 12 மணி வரை மக்கள் சென்று வந்ததால் ஓரளவு மக்கள் நடமாட்டம் இருந்தது. ஆனால் மதியத்திற்கு மேல் பெரும்பாலான சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. ஈரோடு தினசரி காய்கறி மார்க்கெட்டில் பொதுமக்கள் காய்கறிகளை வாங்க காலை 7 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. அதன்பின்னர் அனைவரும் வெளியேற்றப்பட்டு மார்க்கெட் பூட்டப்பட்டது. இரவு முழுவதும் மொத்த வியாபாரம் நடைபெற்றது. பொதுமக்கள் தள்ளுவண்டிகள் மற்றும் தலைசுமை வியாபாரிகள் மூலம் தங்களது குடியிருப்பு பகுதிகளிலேயே காய்கறிகளை வாங்கிக்கொள்ளலாம் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பஸ் ஸ்டாண்டு, ரயில்வே ஸ்டேசன் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. ஈரோட்டில் உழவர் சந்தையில் விவசாயிகள் மற்றும் நுகர்வோர்கள் கூட்டம் மிகவும் குறைவாகவே காணப்பட்டது. ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஊழியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் முன்களப்பணியாளர்கள் ஆகியோர் வாகன சோதனையின்போது அடையாள அட்டையை பரிசோதித்த போலீசார், எவ்வித கெடுபிடிகளும் இன்றி அவர்களை அனுப்பி வைத்தனர்.

அதே வேளையில் தேவையில்லாமல் வாகனங்களில் வெளியே சுற்றியவர்களை வாகன சோதனையின்போது போலீசார் எச்சரித்து திரும்பி அனுப்பி வைத்தனர். ஊரடங்கு கண்காணிப்பு பணிக்காக மாவட்டம் முழுவதும் 55 இடங்களில் 700க்கு மேற்பட்ட போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக எஸ்பி தங்கதுரை கூறினார்.

தினசரி மார்க்கெட்டில் வாகன நெரிசல்

ஈரோடு தினசரி காய்கறி மார்க்கெட்டில் 2 நுழைவு வாயில் உள்ளது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக ஒரு நுழைவு வாயில் பூட்டப்பட்டுள்ளது. இதனால் காய்கறி ஏற்றி, இறக்கி செல்லும் வாகனங்கள் அனைத்தும் ஒரே நுழைவு வாயிலில் வந்து சென்றதால் நேற்று காலை கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது. எனவே 2 நுழைவு வாயில்களையும் திறக்க வேண்டும் என்று வியாபாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: