தொழிற்சாலைகளுக்கு தேவையான உதவிகளை அரசு செய்யும்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் உறுதி

சென்னை: கொரோனா பெருந்தொற்று காலத்தில் தொழில் நிறுவனங்களுக்கு தேவையான உதவிகளை தமிழக அரசு செய்யும் என ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறியுள்ளார்.  குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் ஆய்வுக்கூட்டம் ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் கிண்டியிலுள்ள சிட்கோ தலைமை அலுவலகத்தில் நேற்று  நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தொழில் வணிக இயக்குநர் சு.சிவராசு, தமிழ்நாடு  சிட்கோ நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ரா.கஜலெட்சுமி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஆய்வுக்  கூட்டத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது:  கொரோனா நோய் தொற்று தொடர்பான உபகரணங்கள் மற்றும் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மற்றும் தொடர்ச்சியாக இயங்கும் தொழில் நிறுவனங்கள் நன்கு செயல்பட்டு அரசிற்கு உதவி  வருகின்றன. அந்நிறுவனங்களுக்கு தேவையான நிதியுதவி உட்பட அனைத்து உதவிகளையும் தமிழ்நாடு அரசு செய்யும்.   தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் தமிழகத்தில் புதிய தொழில் முனைவோரை உருவாக்குவதிலும், தொழில் முனைவோருக்கும் தேவையான பயிற்சி வகுப்புகள், சவால்களை  எதிர்நோக்கும் பயிற்சி என தொடர்ந்து தொழில் முனைவோருக்கு உறுதுணையாக இருந்து வருகிறது.

 தொழில் முனைவோருக்கு தங்கள் தொழிலில் வெற்றி பெற, வழிகாட்டுதல்கள், பயிற்சிகள், நிதி ஆதாரம்  போன்ற உதவிகள் அதிகம்  தேவைப்படுகிறது. கொரோனா காலத்தில் தொழில் முனைவோர் சந்திக்கும் இன்னல்களை களைய புதிய யுக்திகள் வகுத்து அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்து தொழில்  துறையில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ செயல்பட வேண்டும். இவ்வாறு கூட்டத்தில் பேசினார்.

Related Stories: