அண்ணா பல்கலை கழக மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: பருவத் தேர்வுகளில் நடந்த முறைகேடுகள் குறித்து மாணவர்கள் அளித்த புகாரை அடுத்து அந்த தேர்வுகளை மீண்டும் நடத்த  வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பருக்கான பருவத் தேர்வுகள், ஒழுங்கு நிகழ்நிலைத் தேர்வாக கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இந்த தேர்வில் மாணவர்கள் தங்களுக்கு அதிக  முறைகேடுகள் நடைபெற்றதாகவும், அதனால் தங்களுக்கு அதிக சிரமங்கள் ஏற்பட்டதாகவும், முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு சென்றனர்.

அதில், மாணாக்கார்களுக்கு ஏற்பட்ட சிரங்களைக்  கருத்தில் கொண்டு அவர்களது வேலை வாய்ப்பு மற்றும் எதிர்காலத்தை கருதியும், நன்கு படிக்கும் சில மாணவர்கள் தங்களுக்கு மதிப்பெண் வெகுவாக குறைந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால்,  மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை உயர் கல்வித்துறை அமைச்சர்  பொன்முடி, செயலாளர் அபூர்வா, அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகளுடன்  ஆலோசனை  நடத்தினார்.

அதைத் தொடர்ந்து சில முடிவுகளை எடுத்து, உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

 அதன்படி,

 பிப்ரவரி 2021ல் நடந்த தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததை கருத்தில் கொண்டு மீண்டும் அந்த தேர்வுகள் நடத்தப்படும்.

 தேர்வு எழுதும் மாணவர்கள் மீண்டும் தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

 பிப்ரவரி மாதம்  நடந்த தேர்வில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட மாணவர்கள் விரும்பினால் அவர்களும் இந்த தேர்வை எழுதலாம்.

 இந்த தேர்வுகள் ஆன்லைன் மூலம் 3 மணி நேரம் நடக்கும். கொரோனாவுக்கு முன்பு பின்பற்றிய பழைய கேள்வித்தாள் முறையே கடைபிடிக்கப்படும்.

இந்த தேர்வுகள் தமிழகத்தில் உள்ள மற்ற பல்கலைக்  கழகங்கள் நடத்தியது போலவே நடத்தப்படும்.

 வரும் ஏப்ரல்  மற்றும் மே மாத பருவத் தேர்வுகளும் மேற்கண்ட முறையிலேயே நடத்தப்படும்.

 தற்போது ஊரடங்கு காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள பட்டப்படிப்புகளுக்கான தேர்வுகள் மே 25ம் தேதி முதல் தொடர்ந்து நடத்தப்படும்.

அதற்கான அறிவிப்புகள் அந்தந்த பல்கலைக் கழகங்களே  வெளியிடும் என்று கூறியுள்ளார்.

Related Stories: