கொரோனா சிகிச்சை மையமான கோசாலை: பசும்பால், கோமியம் மூலம் தயாரித்த மருந்துகள் வழங்கல்: இது குஜராத் மாடல்

அகமதாபாத்: குஜராத்தில் மாடுகளை பராமரிக்கும் கோசாலைக்குள் கொரோனா சிகிச்சை மையம் அமைத்து, பசும்பால், கோமியம் மூலம் தயாரிக்கப்பட்ட மருந்துகள் நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது. குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டம் திடோடா கிராமத்தில் புதுவிதமான கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. மாடுகளை பராமரிக்கும் கோசாலை சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது.  மையத்தை சுற்றி, வைக்கோல் நிரப்பி உள்ளனர். இதனால், நோயாளிகளுக்கு உள்ளே வெயிலின் தாக்கம் இருக்காது என்கிறார் இதன் இயக்குநர் ராம்ரத்தன் மகராஜ்.

அவர் கூறுகையில், ‘‘வேதலக்ஷனா பஞ்சகாவ்யா ஆயுர்வேத கொரோனா தனிமைப்படுத்தும் மையம் என இதற்கு பெயரிட்டுள்ளோம். இங்கு அனுமதி இலவசம். பஞ்சகாவ்யா ஆயுர்வேத தெரபியை பயன்படுத்தி  சிகிச்சை அளிக்கிறோம். இங்கு நோயாளிகளுக்கு கோமியம், நெய் மற்றும் பசும்பாலில் இருந்து தயாரித்த மருந்துகளை தருகிறோம். மாட்டு சாணம் போட்டு விளைவிக்கப்பட்ட உணவு தானியங்களை  வழங்குகிறோம். அதோடு, பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு மையத்தில் போதுமான அளவு ஆக்சிஜன் இருப்பதை உறுதி செய்கிறோம்’’ என்றார்.

ஆக்சிஜன் அளவு 80க்கும் குறைவான நோயாளிகளுக்கு இங்கு முன்னுரிமை தரப்படுகிறது. இங்கே ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளன. இந்த மையத்தில் ஒரு அலோபதி டாக்டர், ஒரு ஆயுர்வேத டாக்டர், 5  நர்சுகள் நோயாளிகளை கவனித்துக் கொள்கின்றனர். இதுபோன்ற தனிமைப்படுத்தும் மையங்கள் லேசான அறிகுறி கொண்ட நோயாளிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் எனவும், வீட்டில் தனிமைப்படுத்திக்  கொள்வதற்கு பதிலாக இதுபோன்ற மையத்தில் நோயாளிகள் தங்கலாம் என்றும் டாக்டர்கள் கூறுகின்றனர்.அதே சமயம், ஆக்சிஜன் அளவு குறைவான நோயாளிகளுக்கு இங்கு சிகிச்சை அளிப்பது ஆபத்தில் முடியும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

Related Stories:

>