‘பரேலியில் ஆக்சிஜன் தட்டுப்பாடு’மத்திய அமைச்சர் கடிதத்தால் வசமாக சிக்கிய உபி முதல்வர்: இனி உண்மையை மறைக்க முடியாது

பரேலி: உத்தரப்பிரதேசத்தில் தனது பரேலி தொகுதியில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இருப்பதாகவும் பல முறைகேடு நடப்பதாகவும் மத்திய அமைச்சர் ஒருவரே கடுமையே குற்றம்சாட்டியிருப்பது பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் கடுமையான மருத்துவ ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. உத்தரப்பிரதேசத்திலும் இதே நிலை இருந்தாலும், அங்கு ஆக்சிஜன் தட்டுப்பாடே இல்லை என அம்மாநில முதல்வர்  யோகி ஆதித்யநாத் கூறி வருகிறார். ஆக்சிஜன் தட்டுப்பாடு என பொய் புகார் கூறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் மிரட்டும் தொனியில் பேசுகிறார்.

இந்நிலையில், அம்மாநில பரேலி தொகுதி பாஜ எம்பியும், மத்திய அமைச்சருமான சந்தோஷ் கங்வார், யோகி ஆதித்யநாத்துக்கு திறந்த மடல் எழுதியுள்ளார். அதில், ‘‘எனது தொகுதியில் கடுமையான ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவுகிறது. வென்டிலேட்டர், ஆக்சிஜன் சிலிண்டர்கள் கள்ளச்சந்தையில் விற்கப்படுகின்றன. மாநில சுகாதார துறையை மக்கள்  தொடர்பு கொண்டால் அவர்கள் போனையே எடுப்பதில்லை. நேரில் சென்று ஆக்சிஜன் சிலிண்டர் கேட்பவர்களையும் அலைய விடுகின்றனர். இதனால் நோயாளிகள் கடுமையான இன்னலை அனுபவித்து  வருகுின்றனர். எனவே, பரேலி மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கூறி உள்ளார்.

இதன் மூலம், உபியில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுவது வெளியாகி இருப்பதால் முதல்வர் யோகிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து மத்திய அமைச்சர் கங்வார் கூறுகையில், ‘‘எனது  தொகுதி மக்கள் என்னிடம் முறையிட்டனர். அதை உபி முதல்வருக்கு முறைப்படி தெரிவித்துள்ளேன்’’ என கூறி உள்ளார்.

Related Stories:

>