கொரோனா 3வது அலையில் குழந்தைகளுக்கு அதிக ஆபத்து ஏன்?

புதுடெல்லி: கொரோனா 3வது அலை ஏற்பட்டால், அதில் குழந்தைகளுக்கே அதிக ஆபத்து இருக்கும் என ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏன் குழந்தைகளுக்கு அதிக ஆபத்து, அவர்களை  ஆபத்தில் இருந்து காப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் தற்போது விளக்கம் அளித்துள்ளனர். கொரோனா முதல் அலையில் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள், குழந்தைகளுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால் 2வது அலையில் உருமாற்ற வைரஸ்கள் பரவத் தொடங்கியதில் இருந்து,  அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட குழந்தைகளையும் அவை தொற்றத் தொடங்கி உள்ளன.

மகாராஷ்டிராவின் அகோலா, அமராவதி மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக 18 வயதுக்கு உட்பட்ட  குழந்தைகளுக்கு கொரோனா தொற்று ஏற்படுவது அதிகரித்து வருகிறது. இவ்விரு மாவட்டத்திலும் 6,826 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் 408 பேர் குழந்தைகள். இது கொரோனா வைரஸ் விடுக்கும் எச்சரிக்கை மணி என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். கொரோனா 3வது அலை ஏற்பட்டால், அதில் அதிக ஆபத்தை எதிர்கொள்ளப் போகிறவர்கள் குழந்தைகள்தான் என  ஏற்கனவே மருத்துவ விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதற்கேற்றார் போல் இப்போதே குழந்தைகள் பாதிக்கப்படுவது அதிகரித்த வண்ணம் உள்ளது.

இது சுகாதார துறைக்கு ஏற்பட்டுள்ள மிகத்  தீவிரமான சவால் என்கிறார் குழந்தைகள் நல டாக்டர் கமல் கிஷோர் டோலே. அவர் கூறுகையில், ‘‘இன்னும் சில மாதத்தில் கொரோனா 3வது அலை தாக்கலாம். அதில் குழந்தைகளுக்கு வைரஸ் தொற்று ஏற்படாமல் பாதுகாப்பது அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்குமே சவாலான  விஷயமாகும். குழந்தைகளுக்கு அதிக நோய் எதிர்ப்பு சக்தி இருந்தாலும், இந்தியாவில் உருமாற்றம் அடைந்த இரட்டை உருமாற்ற வைரஸ் போன்றவை மிகுந்த வீரியமிக்கவை. அவை குழந்தைகளையும்  எளிதாக தாக்கும். எனவே கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை அவசியம் பின்பற்ற வேண்டும்’’ என்கிறார்.

கர்நாடக அரசின் கொரோனா தொழில்நுட்ப ஆலோசனைக் குழு உறுப்பினரான வைராலஜிஸ்ட் டாக்டர் ரவி கூறுகையில், ‘‘குழந்தைகளுக்கு கொரோனா சிகிச்சை அளிக்கக் கூடிய போதுமான மருத்துவ  கட்டமைப்பு இந்தியாவில் இல்லை. குழந்தைகள் கொரோனா வார்டுகள் இல்லை. அவர்களுக்கு பிரத்யேக ஐசியு மருத்துவ வசதிகள் இல்லை. இதையெல்லாம் உடனடியாக செய்ய வேண்டும். கொரோனா முதல்  அலையில் மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் பாராட்டத்தக்கது. ஆனால், 2வது அலை தொடக்கத்தில் பல்வேறு எச்சரிக்கைகள் விடுத்தும் அதை அரசு அலட்சியம் செய்தது. அதன் விளைவுதான் இவ்வளவு  பயங்கரமாக உள்ளது. எனவே அறிவியல் பூர்வமாக, தகவல்களின் அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காமல் கொரோனாவை எதிர்கொள்ள முடியாது’’ என்றார்.

இந்த விஷயத்தில் பெரும்பாலான நிபுணர்கள் கூறுகையில், ‘‘குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடுவதே ஒரே தீர்வு. மேலை நாடுகளில் குழந்தைகள் உடல் நலனையும் அடிக்கடி பரிசோதிக்கின்றனர். அதுபோன்று  இந்தியாவிலும் மேற்கொள்ள வேண்டும். 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் தடுப்பூசி போட வேண்டும். அப்போதுதான் உருமாற்ற வைரஸ்களிடமிருந்து குழந்தைகளை காப்பாற்ற முடியும்’’ என்கின்றனர்.  இதற்கிடையே, 3வது அலைக்கு தயாராக இப்போதே குழந்தைகளுக்கான 360 ஐசியு படுக்கைகள் அமைக்க நடவடிக்கை எடுத்திருப்பதாக மத்திய பிரதேச மாநில அரசு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

பெரும் கேள்விக்குறி

கடந்த மே 1ம் தேதியில் இருந்து தான் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி தந்துள்ளது. அதிலும், தடுப்பூசிக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுவதால் 45  வயதுக்கு கீழே உள்ளவர்களுக்கு தடுப்பூசி கிடைப்பது குதிரைக் கொம்பாக உள்ளது. இந்தநிலையில், 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது குறித்து அரசு எந்த ஆலோசனையும்  மேற்கொண்டதாக தெரியவில்லை. இது குறித்து உச்ச நீதிமன்றம் கூட கேள்வி எழுப்பி உள்ளது. ஆனால் தடுப்பூசி உற்பத்தி போதுமான அளவில் இல்லாத போது குழந்தைகளுக்கும் தடுப்பூசி எப்படி போட  முடியும் என்பது பெரும் கேள்விக்குறியாக உள்ளது.

Related Stories: