நம்பிக்கை வாக்கெடுப்பில் நேபாள பிரதமர் தோல்வி: பதவியிலிருந்து நீக்கம்

காத்மாண்டு: நேபாள நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் கே.பி.ஒளி தோல்வி அடைந்தார். இதையடுத்து அவர் பதவியிலிருந்து நீக்கப்படுகிறார்.நேபாளத்தில் ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சிக்கு அளித்த ஆதரவை முன்னாள் பிரதமர் புஷ்பகமல் தமால் கட்சி வாபஸ் பெற்றது. இதனால், பெரும்பான்மையை இழந்த நிலையில், பிரதமர் கே.பி.ஒளி  நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தல் தேதியை அறிவித்தார். இதற்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தடைவிதித்தது.

இதையடுத்து, நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி நேற்று வாக்கெடுப்பு நடந்தது. 275 எம்பிக்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் பிரதமர் ஒளி தனது பதவியை தக்க  வைக்க 136 ஓட்டுகள் பெற வேண்டியிருந்தது.

ஆனால் 232 எம்பிக்கள் வாக்கெடுப்பில் பங்கேற்ற நிலையில், 124 பேர் நம்பிக்கை தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தனர். 15 பேர் எந்தப்பக்கமும் ஆதரவாக இல்லை என வாக்களித்தனர்.

இதன் மூலம் வாக்கெடுப்பில் பிரதமர் ஒளி தோல்வி அடைந்தார். அந்நாட்டு அரசியல் சாசனப்படி நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்றதால் தாமாக ஒளி தனது பதவியை இழக்கிறார். இனி புதிய கூட்டணி அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நேபாள காங்கிரஸ் தலைவர் பிரகாஷ் மன் சிங் தெரிவித்துள்ளார். அதே சமயம் புதிய அரசு அமைய வழிவிடும் வகையில் ஒளி  உடனடியாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமெனவும் பல்வேறு கட்சி தலைவர்கள் கூறி உள்ளனர்.

Related Stories: