பண்டஸ்லிகா கால்பந்து: பேயர்ன் 9வது முறையாக சாம்பியன்

மியூனிக்: ஜெர்மனியின் பண்டஸ்லிகா கால்பந்து தொடரில் பேயர்ன் மியூனிக் தொடர்ந்து 9வது முறையாக சாம்பியன் பட்டத்தை உறுதி செய்துள்ளது. ஜெர்மனியின் பிரபல கால்பந்து ெதாடர் பண்டஸ்லிகா.  மொத்தம் 18 அணிகள் மோதும் இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 ஆட்டங்கள் என மொத்தம் 34 ஆட்டங்களில்  விளையாட வேண்டும்.  தொடர் இப்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. எல்லா அணிகளும் தங்கள்  32வது ஆட்டத்தை நேற்று முன்தினம் முடித்தன. புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் தொடரும் பேயர்ன் மியூனிக்,  7வது  இடத்தில் இருக்கும்  பிரஷ்யா முன்செங்கலாட்பாக் அணியுடன் மோதியது.

அதில் பேயர்ன்  6-0என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது. அந்த அணியின்  ராபர்ட்  3, தாமஸ் முல்லர், கிங்ஸ்லே, லெரோய்  ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். அதனையடுத்து பேயர்ன் 32 ஆட்டங்களில் விளையாடி 23 வெற்றி, 5 டிரா, 4 தோல்விகளுடன்  74 புள்ளிகளை பெற்று முதல் இடத்தில் தொடர்கிறது. இன்னும் 2 ஆட்டங்களில் விளையாட வேண்டிய நிலையில் பேயர்ன் மியூனிக் சாம்பியனாகி விட்டது.

காரணம் 2வது இடத்தில் உள்ள  ஆர்பி லிப்சிக் 32 ஆட்டங்களில் விளையாடி 64புள்ளிகளும், 3வது இடத்தில் உள்ள உல்ப்ஸ்பர்க் 32 ஆட்டங்களில் விளையாடி 60 புள்ளிகளும் பெற்றுள்ளன. இந்த 2 அணிகளும்  அடுத்து விளையாட உள்ள தலா 2 ஆட்டங்களில் வென்றாலும் பேயர்ன் அணியை முந்த  வாய்ப்பில்லை. அதனால் சாம்பியன் பட்டத்தை  பேயர்ன் அணி வென்று விட்டது என்று கூறலாம்.  எஞ்சிய ஆட்டங்கள் மே 22ம் தேதியுடன் முடிகிறது. அன்று பேயர்ன் அணிக்கு பண்டஸ்லிகா கோப்பை வழங்கப்படும். நடப்பு  சாம்பியனான பேயர்ன் மியூனிக்  தொடர்ந்து 9வது முறையாக  பண்டஸ்லிகா  கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. இப்படி ஹாட்ரிக்கில் ஹாட்ரிக் அடித்து  2013ம் ஆண்டு முதல் தொடர்ந்து  கோப்பையை வெல்லும் பேயர்ன் அணிக்கு இது 30வது வெற்றிக் கோப்பையாகும்.

முல்லர் சாதனையை  முடியடிப்பாரா?

பிரஷ்யாவுக்கு எதிரான போட்டியில்  பேயர்ன் அணி வீரர் ராபர்ட் லெவாண்டொஸ்கி(போலாந்து) ஹாட்ரிக் கோல் அடித்துள்ளார். நடப்புத் தொடரில் ராபர்ட் இதுவரை 39கோல்கள் அடித்துள்ளார். ஏற்கனவே  ஜெரார்டு முல்லர் 1972ம் ஆண்டு பேயர்ன் அணிக்காக அடித்த 40கோல்களே பண்டஸ்லிகா தொடர் ஒன்றில்  அடிக்கப்பட்ட அதிக கோல்கள் ஆகும். எனவே இன்னும் 2 ஆட்டங்கள் எஞ்சியுள்ள நிலையில்  ராபர்ட் கோல் அடித்து முல்லரின் சாதனையை சமன் செய்வாரா, இல்லை முறியடிப்பாரா என்ற எதிர்பார்பபு எழுந்துள்ளது.

Related Stories: