ஏழு தமிழர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்: வைகோ வேண்டுகோள்

சென்னை: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 தமிழர்களை விடுதலை செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று வெளியிட்ட அறிக்கை: தவறு செய்யாமலே ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்து வருகின்ற ஏழு பேரில், சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவரும் மரண தண்டனை  கைதிகளாகவே மனதளவில் சித்ரவதை அனுபவித்து வருகின்றனர். அதுபோலவே நளினி, ரவிச்சந்தின், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோரின் இளமை வாழ்க்கையும் இருண்டு பாழாய்ப்போனது.

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தனது தீர்ப்பில், எழுவரையும் தமிழக அரசே விடுதலை செய்யலாம் என்று கூறிய பின்னரும், இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாடு அரசு அவர்களை விடுதலை  செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப ஆளுநருக்குக் கோரிக்கை விடுத்தும், ஆளுநர் அந்தக் கோரிக்கையை குப்பைத் தொட்டியில் போடுவது போல் போட்டுவிட்டார்.

ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கருத்தை ஏற்கனவே திமுக வலியுறுத்தி வருகிறது. எனவே தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏழு பேரையும் விடுதலை செய்து ஆணை பிறப்பித்து  கோடானு கோடி தமிழர்களின் உள்ளத்தில் பால்வார்க்கும் செய்தியாக நடவடிக்கை எடுக்குமாறு மதிமுக சார்பில் வேண்டுகிறேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: