அசாமின் 15வது முதல்வராக ஹிமந்தா பிஸ்வா பதவியேற்பு

கவுகாத்தி: வடகிழக்கு ஜனநாயக கூட்டணி ஒருங்கிணைப்பாளர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அசாமின் 15வது முதல்வராக நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.  அசாம் மாநிலத்தில் முதல்வரை தேர்வு செய்வதில் கடந்த ஒரு வாரமாக குழப்பம் நீடித்து வந்தது. பாஜ மேலிடம் முன்னாள் முதல்வர் சர்பானந்த சோனாவால் மற்றும் ஹிமந்தா பிஸ்வார் சர்மா  ஆகியோரிடையே பேச்சுவார்த்தை நடத்தியது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் நடந்த சட்டமன்ற கூட்டத்தில் சட்டமன்ற கட்சி தலைவராக ஹிமந்தா பிஸ்வா சர்மா ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.  இதனை தொடர்ந்து நேற்று மந்த சங்கர்தேவா கலாஷேத்ராவில் பதவியேற்பு விழா நடைபெற்றது.

ஆளுநர் ஜகதீஷ் முக்கி,  ஹிமந்தா பிஸ்வா சர்மாவிற்கு முதல்வராக பதவிபிரமாணம் செய்து வைத்தார்.  மேலும் 13 சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். பதவியேற்பு விழாவில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட்டது.  இந்த விழாவில் பாஜ தலைவர் ஜேபி நட்டா, முன்னாள் முதல்வர் சர்பானந்த  சோனாவால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அசாம் மாநிலத்தில் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஹிமந்தா பிஸ்வா சர்மாவிற்கு பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

டாப்-5 மாநிலமாக்க உறுதி

பதவியேற்புக்கு பின் செய்தியாளர்களுக்கு அளித்த தனது முதல் பேட்டியில் ஹிமந்தா பிஸ்வா கூறுகையில், ‘‘இந்தியாவின் முதல் 5 மாநிலங்களில் ஒன்றாக அசாமை ஆக்க வேண்டுமென்பதே எங்கள்  குறிக்கோள். அதற்கான பணிகளை நாளை (இன்று) முதல் தொடங்கப் போகிறோம். நாளை நடக்கும் அமைச்சரவை கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். தேசிய  குடிமக்கள் பதிவேட்டில் விடுபட்டுள்ள 30 சதவீதம் பேரின் பெயர்கள் மறுஆய்வு செய்யப்படும். தகுதியானவர்கள் பட்டியலில் நிச்சயம் இடம் பெறுவார்கள்’’ என்றார்.

Related Stories: