கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு தோல்வி அடைந்துவிட்டது: காங்கிரஸ் காரிய கமிட்டியில் சோனியா பேச்சு

புதுடெல்லி: ‘கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு தோல்வி அடைந்து விட்டது. அறிவியல்பூர்வமான ஆலோசனைகளை அரசு நிராகரித்ததால்தான் கொடுமையான தாக்கத்தை நாடு சந்தித்து  வருகிறது’ என காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் சோனியா காந்தி பேசினார்.இந்தியாவில் கொரோனா வைரஸ் 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது. பல மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லாமல் தெருக்களில் நோயாளிகள் சிகிச்சை பெற வேண்டிய அவல நிலைக்கு  தள்ளப்பட்டுள்ளனர். ஆக்சிஜன், வென்டிலேட்டர் போன்ற மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாட்டால் பலர் பலியாகின்றனர். தடுப்பூசியிலும் தட்டுப்பாடு இருப்பதால், மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டி  உள்ளது.

இந்நிலையில், கொரோனா நிலவரம் தொடர்பாக ஆலோசிப்பதற்கான காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் நேற்று நடந்தது. வீடியோ கான்பரன்ஸ் மூலம்  நடந்த இக்கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் சோனியா பேசியதாவது: கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் மத்திய அரசு தோல்வி அடைந்துவிட்டது. மருத்துவ அறிஞர்களின் அறிவியல்பூர்வமான ஆலோசனைகளை மத்திய அரசு வேண்டுமென்றே நிராகரித்ததால்  அதன் கொடுமையான தாக்கத்தை தற்போது நாடு அனுபவித்து வருகிறது.

நாட்டின் பொது சுகாதார அமைப்புகள் அனைத்தும் சீர்குலைந்துள்ளது. மோடி அரசு தனது கடமைகளையும், பொறுப்புகளை  தட்டிக்கழித்து வருகிறது. 18 முதல் 44 வயதினருக்கான கொரோனா தடுப்பூசி செலவுகளை மாநிலங்களின் மீது மத்திய அரசு திணிக்கிறது.

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு மத்திய அரசு நடத்திவருவது வெட்கக்கேடானது. நாடு தற்போது அசாதாரண பொது சுகாதார நெருக்கடி நிலையில் உள்ளது. இதிலிருந்து  மீட்பதற்கான ஆலோசனைகளை மேற்கொள்ள அனைத்து கட்சி கூட்டத்தை மத்திய அரசு கூட்டவேண்டுமென நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார். மேலும், சமீபத்தில் நடந்த 5 மாநில தேர்தலில் தமிழகம் தவிர மற்ற இடங்களில் காங்கிரஸ் பெற்ற தோல்வியிலிருந்து பாடம் கற்க வேண்டுமெனவும் கட்சியினருக்கு சோனியா  அறிவுறுத்தினார்.

கட்சி தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு

காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் ஜூன் மாதம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா சூழலில் தேர்தலை நடத்துவது உகந்ததாக இருக்காது என காரிய  கமிட்டி கூட்டத்தில் குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் வலியுறுத்தினர். அதைத் தொடர்ந்து கொரோனா சூழல் சரியாகும் வரை தேர்தலை ஒத்தி வைப்பது என ஒருமனதாக முடிவு

செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலை வந்திருக்குமா?

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் நேற்று தனது டிவிட்டர் பதிவில், ‘‘ெவளி நாடுகளில் இருந்து பெறப்பட்ட நிவாரணப் பொருட்களை ஏதோ தன் முனைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டது போன்று மோடி அரசு மார்தட்டிக் கொள்வது வேதனை அளிக்கிறது. தன்னுடைய கடமைகளையும், பணிகளையும் மத்திய அரசு உரிய வகையில் செய்திருந்தால் இந்தியாவுக்கு இந்த இக்கட்டான நிலை வந்திருக்குமா?’’ என கேள்வி எழுப்பி உள்ளார்.

பிரியங்கா தாக்கு

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று தனது டிவிட்டர் பதிவில், ‘‘பிரதமரின் புதிய வீடு கட்டப்படும் மத்திய விஸ்டா திட்டத்திற்கான நிதி ரூ.20,000 கோடி. இந்த நிதியில் 62 கோடி தடுப்பூசி  டோஸ் வாங்கலாம், 22 கோடி ரெம்டெசிவிர் குப்பிகள் வாங்கலாம், 3 கோடி 10 லிட்டர் ஆக்சிஜன் சிலிண்டர் வாங்கலாம், 12,000 படுக்கையுடன் 13 எய்ம்ஸ் மருத்துவமனை கட்டலாம், அப்புறம் என்ன?’’ என  விமர்சித்துள்ளார்.

Related Stories: