பொதுமக்களுக்கு டீ போட்டுக் கொடுத்த அமைச்சர் மஸ்தான்: செஞ்சியில் ருசிகரம்

செஞ்சி: பழசை மறக்காமல் பொதுமக்களுக்கு டீ போட்டு கொடுத்து அரசு பணிகளை அமைச்சர் மஸ்தான் துவக்கினார். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களில் கொரோனா தடுப்பு பணிகள், கொரோனா நோய்க்கான தடுப்பூசிகள் மற்றும் முகாம்கள் குறித்து சிறுபான்மை  நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆய்வு செய்தார். அதன்படி அரசு மருத்துவமனையில் நோய் தடுப்பு பணிகள் சிறப்பாக நடக்கிறதா, ஏதேனும் குறைகள் உள்ளதா என கேட்டறிந்தார். பின்னர் ஆலம்பூண்டி  தனியார் கல்லூரியில் கொரோனா சிகிச்சை மையம் அமைப்பதற்கான இடத்தையும் பார்வையிட்டார்.

இதுபோன்று சத்தியமங்கலம், அவலூர்பேட்டை, மேல்மலையனூர் ஆகிய பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களுக்கும் நேரில் சென்று ஆய்வு நடத்தி, மருத்துவர்கள் கண்காணிப்புடன் பணிகளை  மேற்கொள்ள வேண்டும், உங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும், நீங்கள் பாதுகாப்பாக இருந்தால்தான் நோயாளிகளை நீங்கள் குணப்படுத்த முடியும் எனவும் கேட்டுக்கொண்டார்.

முன்னதாக அவர், தன்னை அரசியல் வாழ்க்கையில் உயர்த்தி அமைச்சராக்கி பெருமைப்படுத்திய செஞ்சி பேருந்து நிலையம் எதிரில் உள்ள தனக்கு சொந்தமான டீக்கடைக்கு சென்று பழைய நிகழ்வை  நினைவுப்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு டீ போட்டுக்கொடுத்து அங்கிருந்து அரசு பணிகளை தொடங்கினார்.  ஆய்வின்போது விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, விழுப்புரம் எஸ்.பி. ராதாகிருஷ்ணன் மற்றும் சுகாதாரத்துறை இணை இயக்குனர் செந்தில்குமார் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Related Stories: