மருத்துவமனையில் மாற்றிக் கொடுத்ததால் புதைக்கப்பட்ட கொரோனா நோயாளி உடல் தோண்டி எடுப்பு: மீண்டும் அடக்கம் செய்யப்பட்டது

திங்கள்சந்தை: கொரோனாவுக்கு இறந்தவர் உடல் மாற்றிக்கொடுக்கப்பட்ட நிலையில் அதிகாரிகள் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டு மீண்டும் அடக்கம் செய்யப்பட்டது. நாகர்கோவில் அருகே மறவன்குடியிருப்பை சேர்ந்த 72 வயது முதியவர் மற்றும் திங்கள்சந்தை அருகே உள்ள வட்டம் பகுதியை சேர்ந்த 84 வயது முதியவர் ஆகியோர் ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி  மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தனர். இருவரும் கடந்த 8ம் தேதி இரவு இறந்தனர். 2 பேரின் உடலும் மருத்துவமனையில் உள்ள பிணவறையில் வைக்கப்பட்டது. முதலில் வட்டத்தை  சேர்ந்த முதியவரின் உறவினர்கள் காலையில் உடலை பெற்று சென்றனர்.

ஊரில் இறுதி சடங்குகள் செய்து அடக்கம் செய்தனர். பின்னர் மறவன்குடியிருப்பை சேர்ந்தவர்கள் தங்களது உறவினர் உடலை வாங்க வந்த போது கொடுக்கப்பட்ட உடல் அவருடையது இல்லை என்பது  தெரியவந்தது. உடல் வட்டத்திற்கு மாற்றி அனுப்பி வைக்கப்பட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து வட்டத்தை சேர்ந்த முதியவரின் உடலை அவர்களது உறவினர்களிடம் கொடுத்து விட்டு, அடக்கம் செய்த  உடலை தோண்டி எடுப்பது என முடிவு செய்யப்பட்டது.

அதைத் தொடர்ந்து வட்டத்தை சேர்ந்தவரின் உடலை உறவினர்கள் வாங்கிக்கொண்டு சென்றனர். இதற்கிடையே அடக்கம் செய்யப்பட்ட உடலை தோண்டி எடுக்க கூடாது என்று எதிர்ப்பு வட்டம் பகுதி மக்கள்  மத்தியில் எழுந்தது. மறவன்குடியிருப்பில் இருந்து சென்றவர்கள் அடக்கம் செய்யப்பட்ட உறவினரின் உடலை தோண்டி தர வேண்டும் என்று கேட்டனர். இரணியல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ்,  கல்குளம் தாசில்தார், வருவாய் அதிகாரிகள் ஆகியோர் சம்பவ இடத்தில் தொடர்ந்து முகாமிட்டனர்.

பின்னர் அங்கு திரண்டு நின்ற பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை முடிவில் உடலை தோண்டி எடுத்து செல்ல அனுமதி வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இரவு 10.30 மணி அளவில்  ஜேசிபி உதவியுடன் அடக்கம் செய்யப்பட்ட பகுதியில் மண் அகற்றப்பட்டு உடல் தோண்டி எடுக்கப்பட்டது. அதன்பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் கொண்டுவரப்பட்ட உடல் தோண்டப்பட்ட  அதே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அதன் பின்னர் பரபரப்பு முடிவுக்கு வந்தது. மறவன்குடியிருப்புக்கு கொண்டுவரப்பட்ட முதியவர் உடலும் இறுதி மரியாதை செலுத்தப்பட்டு அங்கு அடக்கம்  செய்யப்பட்டது.

Related Stories: