‘முதல்வர் என்கிட்டே பேசுனது ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு...’: மு.க.ஸ்டாலினிடம் சைக்கிள் பெற்ற சிறுவன் உற்சாகம்

மதுரை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னிடம் பேசியது சந்தோஷத்தை தந்ததாக, அவரிடம் சைக்கிள் பெற்ற சிறுவன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். மதுரை ஆரப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அமரேஸ் இளங்கோவன். மாநகராட்சி மின்பிரிவில் காண்டிராக்டராக பணியாற்றி வருகிறார். மனைவி தீபா. மகன் ஹரிஸ் வர்மன் (7). இரண்டாம் வகுப்பு  மாணவர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஹரிஸ்வர்மன், தந்தையிடம் சைக்கிள் வாங்குவதற்கு பணம் சேர்க்க உண்டியல் வாங்கித் தருமாறு கேட்டார். அவரும் வாங்கித்தரவே அதில் தனக்கு கிடைத்த சிறு  தொகையை சிறுவன் சேமித்து வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு எண்ணியபோது, உண்டியலில் ₹1,000 பணம் சேர்ந்திருந்தது. இதனை முதல்வரின் நிவாரண நிதிக்கு, கொரோனா தடுப்பு பணிக்காக கொடுக்க வேண்டுமென தனது எண்ணத்தை  தந்தையிடம் கூறினார். அவரும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு டிடி எடுத்து, தனது கைப்பட எழுதிய கடிதம் ஒன்றையும் இணைத்து அனுப்பி வைத்தார். இதனையறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்,  மகிழ்ச்சியடைந்தார்.

இதனைத்தொடர்ந்து, மதுரை வடக்கு தொகுதி திமுக எம்எல்ஏ கோ.தளபதி, முதல்வரின் வேண்டுகோளின்பேரில், அச்சிறுவனின் வீட்டுக்கு நேரில் சென்று பாராட்டினார். அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின்  சார்பில், சைக்கிள் ஒன்றை பரிசாக வழங்கினார்.

பின்னர் கோ.தளபதி எம்எல்ஏ அங்கிருந்து தனது செல்போனில் முதல்வர் மு.க.ஸ்டாலினை தொடர்பு கொண்டு அச்சிறுவனை பேச வைத்தார்.

அப்போது முதல்வர், அச்சிறுவனுக்கு பாராட்டு தெரிவித்ததுடன், ”நல்லா இருக்கியா? உன் பெயர் என்ன? என்ன படிக்கிறாய்? அப்பா பெயர் என்ன? சைக்கிளை எடுத்துக்கிட்டு இப்போது வெளியே போகாதே.  ெகாரோனா இருக்கு. கொரோனா முடிந்ததும் ஓட்டு. நல்லா படி” என்றார். அதற்கு அச்சிறுவன், முதல்வரிடம், ஹலோ தாத்தா, வாழ்த்துக்கள் தாத்தா, 2ம் வகுப்பு படிக்கிறேன். சைக்கிள் வாங்கி கொடுத்ததற்கு நன்றி  எனக்கூறினார். பதிலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலினும் நன்றி  தெரிவித்தார்.

இதுகுறித்து சிறுவன் ஹரிஸ்வர்மனிடம் கேட்டபோது, ‘‘சிஎம்மிடம் (முதல்வர்) பேசியது ரொம்ப, ரொம்ப சந்தோஷமாக இருந்துச்சு. கனவா? நனவான்னே தெரியலை. தாத்தா சிஎம் ஆனப்புறம் நல்லது  செய்றாங்க. அவங்களே என்கிட்டே பேசுனதால, வீட்ல எல்லோரும் சந்தோஷமாக இருக்காங்க...’’ என்றார்.

முதல்வர்  ட்விட்டர் பதிவு

முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘‘ஹரிஸ்வர்மன் என்ற சிறுவன் தனக்கு மிதிவண்டி வாங்குவதற்காக வைத்திருந்த உண்டியல் தொகையை கோவிட்-19 தடுப்புக்காக முதலமைச்சர்  நிவாரண நிதிக்கு அனுப்பிய செய்தி கேட்டு நெகிழ்ந்தேன். இத்தகைய உணர்வே தமிழகத்தின் வலிமை! சிறுவனுக்கு மிதிவண்டி வாங்கிக்கொடுத்து தொலைபேசியில் அழைத்து வாழ்த்தினேன்” என்று  தெரிவித்துள்ளார்.

Related Stories: