சட்டசபை தேர்தலில் எம்.எல்.ஏ.,க்கள் ஆனதால் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ராஜ்யசபா எம்பி பதவி ராஜினாமா

சென்னை: தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏக்களாக தேர்வாகி உள்ளதால் தங்களது மாநிலங்களவை எம்பி பதவியை கே.பி.முனுசாமியும் மற்றும் வைத்திலிங்கம் ஆகிய இருவரும் நேற்று ராஜினாமா செய்துள்ளனர். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தரப்பில் கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி தொகுதியில் போட்டியிட்ட கே.பி.முனுசாமியும், தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட வைத்திலிங்கமும் வெற்றி பெற்றனர்.

இதையடுத்து எம்.பி மற்றும் எம்.எல்.ஏ என இரண்டு பதவிகளிலும் இருவரும் இருந்தனர். ஆனால் இது தேர்தல் சட்டவிதிகளுக்கு எதிரானதாகும். அதனால் இதில் எந்தப் பதவியை  ராஜினாமா செய்வது என்பது கே.பி.முனுசாமி மற்றும் வைத்திலிங்கம் ஆகியோருக்கு பெரும் சிக்கலாக இருந்தது. ஒருவேளை எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தால் சம்பந்தப்பட்ட தொகுதிகளுக்கு மீண்டும் இடைத்தேர்தல் நடத்த வேண்டும். இதனால் அதிமுகவின் மொத்த எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கையில் குறைவு ஏற்படும்.

அதேபோன்று எம்.பி பதவியை ராஜினாமா செய்தாலும் 2 மாநிலங்களவை எம்.பி.யை அதிமுக தரப்பில் மீண்டும் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற இக்கட்டான நிலை நீடித்து வந்தது. இந்நிலையில் அதிமுக சார்பாக வெற்றி பெற்றவர்கள் எம்.எல்.ஏவாக இன்று பதவி ஏற்க இருக்கும் நிலையில் தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற கே.பி.முனுசாமி மற்றும் வைத்திலிங்கம் ஆகிய இருவரும் எம்.பி. பதவியை நேற்று ராஜினாமா செய்தனர். சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றதால் இருவரும் எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ராஜினாமா தொடர்பான கடிதத்தை இருவரும் மாநிலங்களவை சபாநாயகர் வெங்கையா நாயுடுவிற்கு அனுப்பி வைத்தனர்.

இதில் எம்பி பதவியின் காலக்கட்டத்தை பொறுத்தமட்டில், வைத்திலிங்கத்திற்கு அடுத்த ஓராண்டும், கே.பி.முனுசாமிக்கு அடுத்த நான்கு வருடம் என பதவிக்காலம் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பதவிகளுக்கு மீண்டும் தேர்தல் நடக்கும்பட்சத்தில் வைத்திலிங்கம் இடத்தில் நியமிக்கப்படுவர் ஓராண்டு பதவியிலும், கே.பி.முனுசாமி இடத்தில் நியமனம் செய்யப்படுவர் 2026ம் ஆண்டு அதாவது 5 வருடம் பதவியிலும், அதேபோன்று மறைந்த முகமது ஜான் இடத்திற்கு வருபவர் 4 ஆண்டுகளும் மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவி வகிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 36 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு மாநிலங்களவை எம்பி பதவி என்பதால் அதிமுகவிற்கு இந்த மூன்று இடங்களும் கிடைப்பது கேள்விக்குறியாகி உள்ளது.

* மூன்று இடம் காலி

கேபி.முனுசாமி மற்றும் வைத்திலிங்கம் ஆகிய இருவரும் தற்போது அவர்களது எம்பி பதவியை ராஜினாமா செய்தது, மற்றும் கடந்த 2019ம் ஆண்டு அ.தி.மு.க மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட முகமது ஜான் கடந்த மார்ச் மாதம் இறந்தது என தற்போது மொத்தம் மூன்று மாநிலங்களவை உறுப்பினர் பதவிகள் காலியாக உள்ளது.

Related Stories: