×

துபாயிலிருந்து வந்த கொரியரில் ரூ.1.20 கோடி தங்கம் கடத்தல்: ஆசாமிகளுக்கு வலை

சென்னை: துபாயிலிருந்து சென்னைக்கு சரக்கு விமானத்தில் நேற்று முன்தினம் இரவு வந்த கொரியர் பார்சல்களை சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது சென்னை முகவரிக்கு வந்த ஒரு பார்சலில், உள்ள பூ மற்றும் காய்கறி செடிகளின் விதைகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இது சுங்கத்துறைக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, அந்த பார்சலை தனியே எடுத்துவைத்தனர். மேலும், அந்த பார்சலில் உள்ள செல்போன் எண்ணை தொடர்பு கொண்டனர். அந்த எண் உபயோகத்தில் இல்லை என்று வந்தது. விசாரணையில் அந்த முகவரியும் போலி என தெரியவந்தது. அதன்பின்பு அந்த பார்சலை திறந்துபார்த்தனர்.

அதற்குள் ஓட்ஸ் பாக்கெட்டுகள் மற்றும் குளிர்பானம் தயாரிக்கும் பவுடர் அடங்கிய பாக்கெட்டுகள் இருந்தன. அதை உடைத்து பார்த்தபோது, ஓட்ஸ், குளிர்பான பவுடர்களில் தங்கப்பொடி தூள்கள் கலந்திருந்தன. இதையடுத்து, அவைகளை தண்ணீரில் கரைத்து தங்கப்பொடி தூள்களை வடிகட்டி எடுத்தனர். மொத்தம் 2.5 கிலோ தங்கப்பொடி தூள்கள் இருந்தன. அதன் சர்வதேச மதிப்பு ரூ.1.20 கோடி. இதையடுத்து தங்கப்பொடி தூள்களை சுங்கத்துறையினர் கைப்பற்றினர். அதோடு சுங்கத்துறையினர் இதுபற்றி வழக்குப்பதிவு செய்தனர். செடி, விதைகள் என்று குறிப்பிட்டு, தங்கத்தூள்களை நூதனமான முறையில் சென்னைக்கு கடத்திய கடத்தல் ஆசாமிகளை தீவிரமாக தேடுகின்றனர்.

Tags : Dubai , 1.20 crore gold smuggled by couriers from Dubai: Web for Assamese
× RELATED கனமழையால் ஐக்கிய அரபு அமீரகத்தில்...