தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி தேர்வு ஓ.பன்னீர் செல்வம் வெளிநடப்பு: அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கூச்சல் குழப்பம்

சென்னை: தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால் அதிருப்தி அடைந்த ஓ.பன்னீர்செல்வம் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் இருந்து கோபமாக வெளியேறினார்கள். இது தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக 180 இடங்களில் போட்டியிட்டது. மீதமுள்ள 54 இடங்கள் கூட்டணி கட்சிகளுக்கு வழங்கப்பட்டது. அதிமுக போட்டியிட்ட 180 இடங்களில் 65 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சியை இழந்துள்ளது.

திமுக மட்டும் 125 இடங்களில் வெற்றிபெற்று அறுதி பெரும்பான்மையுடன் தமிழகத்தில் ஆட்சி அமைத்துள்ளது. அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றுள்ளார். 65 இடங்களில் வெற்றி பெற்றுள்ள அதிமுக எதிர்க்கட்சி வரிசையில் உட்காருகிறது. இந்த நிலையில் அதிமுக சார்பில் எதிர்க்கட்சி தலைவரை தேர்ந்தெடுக்கும் கூட்டம் கடந்த 7ம் தேதி (வெள்ளி) ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 65 எம்எல்ஏக்கள் மற்றும் அதிமுக கட்சி முன்னணி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பங்கேற்ற பலரும் எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதற்கு ஓ.பன்னீர்செல்வம் சம்மதிக்கவில்லை. எடப்பாடி பழனிசாமி எடுத்த தன்னிச்சையான முடிவால்தான் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது. வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியதால் தென்மாவட்டங்களில் அதிமுக படுதோல்வியை தழுவியது. ஒவ்வொரு முறையும் எடப்பாடியின் கோரிக்கையை ஏற்க முடியாது. எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமியை ஏற்க முடியாது என்று ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக கூறினார்.

இதனால் அன்று நடந்த கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்காமல் 10ம் தேதிக்கு (நேற்று) ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் அதிமுகவில் மீண்டும் கோஷ்டி மோதல் உச்சக்கட்டதை அடைந்துள்ளதாக கருதப்பட்டது. அறிவித்தபடி, அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நேற்று காலை 9.30 மணிக்கு சென்னை, ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு வந்த எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தங்கள் தலைவர்களை ஆதரித்து கோஷம் எழுப்பினர். எம்எல்ஏக்கள் கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 10 மூத்த தலைவர்கள் ஒரு அறையில் தனியாக கூடி பேசினர்.

இதில் பேசிய பலரும் எடப்பாடி பழனிசாமியை எதிர்க்கட்சி தலைவராக ஒருமனதாக தேர்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால், ஓ.பன்னீர்செல்வம் தனது கருத்தில் இருந்து இறங்கி வரவில்லை. ஒரு கட்டத்தில், முன்னாள் சபாநாயகர் தனபாலை எதிர்க்கட்சி தலைவராக அறிவித்தால் அதற்கு நான் முழு ஆதரவு தெரிவிக்கிறேன் என்று கூறினார். ஆனால் இதற்கு எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் சம்மதிக்கவில்லை. பின்னர் கட்சியின் முதல் மாடியில் எம்எல்ஏக்கள் கூடி இருந்த அரங்கத்திற்கு எடப்பாடியும், ஓபிஎஸ்சும் வந்தார்கள். அங்கு வந்து பேசிய ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சி தலைவராக தனபாலை நான் முன்மொழிவதாக கூறியுள்ளார்.

இதற்கு பதில் அளித்து பேசிய தனபால், அனைத்து எம்எல்ஏக்களும் ஒருமித்த ஆதரவு தந்தால் மட்டுமே நான் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட சம்மதிக்கிறேன். ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தால், எதிர்க்கட்சி தலைவர் பதவி தனக்கு வேண்டாம் என்று கூறி விட்டார். இதனால் அங்கு கூடி இருந்த எம்எல்ஏக்கள் பலரும் எடப்பாடி பழனிசாமி தான் எதிர்க்கட்சி தலைவராக வர வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர். இதனால் கோபம் அடைந்த ஓ.பன்னீர்செல்வம் கூட்டத்தில் எதுவும் பேசாமல் அமைதியாக உட்கார்ந்து கொண்டார்.

 இதையடுத்து, ஏற்கனவே தயாராக வைத்திருந்த அதிமுக அதிகாரப்பூர்வமான கடிதத்தில் எதிர்க்கட்சி தலைவராக ஒருமனதாக எடப்பாடி பழனிசாமியும், எதிர்க்கட்சி துணை தலைவராக ஓ.பன்னீர்செல்வமும் தேர்வு செய்யப்பட்டதாக அச்சடிக்கப்பட்டு கொண்டு வரப்பட்டது. இந்த கடிதத்தை ஓ.பன்னீர்செல்வத்திடம் வழங்கி, கையெழுத்து போடும்படி எடப்பாடி பழனிசாமி கேட்டார். ஆனால் ஓபிஎஸ் கையெழுத்து போடவில்லை. எதிர்க்கட்சி துணை தலைவராக நான் இருக்க விரும்பவில்லை. எப்போதும் நான் 2வது இடத்தில்தான் இருக்க வேண்டுமா? துணை தலைவராக உங்களுக்கு வேண்டியவர்களை, நீங்களே போட்டுக் கொள்ளுங்கள். நான் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்து கொள்கிறேன்.

கட்சியை எப்படி வழிநடத்த வேண்டும் என்று எனக்கு தெரியும் என்றார். பின்னர், எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று மட்டுமே மாற்றி அச்சடித்து வரும்படி கட்சி நிர்வாகிகளிடம் தெரிவித்தார். இதையடுத்து ஓபிஎஸ் கூறியபடி மாற்றி அச்சடிக்கப்பட்ட கடிதம் கொண்டு வரப்பட்டது. அதில் ஓ.பன்னீர்செல்வம் கையெழுத்திட்டு விட்டு கோபமாக கூட்டத்தில் இருந்து வெளியேறி, தனது காரில் ஏறி வீட்டுக்கு புறப்பட்டு சென்று விட்டார். எம்எல்ஏக்கள் கூட்டம் சுமார் 3 மணி நேரம் நடைபெற்றது.

நேற்று நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து கட்சி தலைமை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் 10ம் தேதி (நேற்று) காலை 9.30 மணிக்கு சென்னையில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக சட்டமன்ற கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களால் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் துணை தலைவராக யாரையும் நியமிக்கவில்லை. இதனால் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

எனினும், எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டாலும், அவரை வாழ்த்தி ஓ.பன்னீர்செல்வம் பூங்கொத்து மற்றும் சால்வை எதுவும் அணிவிக்கவில்லை. கட்சி நிர்வாகி மகாலிங்கம் பூங்கொத்து எடுத்து வந்து ஓ.பன்னீர்செல்வத்திடம் கொடுத்து, எடப்பாடிக்கு கொடுக்கும்படி கேட்டுக் கொண்டார். ஆனால் அவர் மறுத்து விட்டார். எடப்பாடியும் ஓடி வந்து பொக்கே கொடுங்கண்ணே என்றார். அதையும் அவர் காதில் வாங்காமல் விறு விறுவென புறப்பட்டுச் சென்று விட்டார்.

அதேபோன்று எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டவுடன் ஜெயலலிதா சமாதிக்கு சென்று மலர்வளையம் வைத்து யாரும் ஆசி பெறவில்லை. இதையடுத்து, எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கடிதத்தை நேற்று மதியம் அதிமுக எம்எல்ஏக்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், தனபால், வேலுமணி, செல்லூர் ராஜு உள்ளிட்ட எம்எல்ஏக்கள் சென்னை தலைமை செயலகம் சென்று தமிழக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம் வழங்கினர். இதற்கிடையில் நேற்றிரவு சென்னையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்கு சென்ற எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவராக தன்னை தேர்ந்தெடுத்ததற்கு நன்றி தெரிவித்தார்.

Related Stories:

>