படுக்கைகள் இல்லாமல் தவித்த நோயாளிகள்..! ஜீரோ நிலை ஆக்சிஜன் பாய்ண்ட் என்ற புதிய பிரிவை தொடங்கிய ஸ்டான்லி மருத்துவமனை

சென்னை: சென்னையில் பெருகி வரும் கொரோனா தொற்றால் அரசு மருத்துவமனைகளுக்கு அழைத்து வரப்படும் நோயாளிகளுக்கு படுக்கைகள் கிடைக்காமல் ஆம்புலன்சில் வைத்தே சிகிச்சை அளிக்கப்படுவதாக புகார் எழுந்தது. அதனால் மருத்துவமனை வளாகம் மட்டுமின்றி வெளிப்பகுதி சாலைகளிலும் ஆம்புலன்ஸ்கள் அணி வகுத்தன. சேலத்தில் இதேபோன்று ஆம்புலன்சில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டதால் 3 பேர் உயிரிழக்க நேரிட்டது. அதுபோன்ற நிலையை தவிர்க்க சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் ஜீரோ நிலை ஆக்சிஜன் பாய்ண்ட் என்ற புதிய பிரிவை ஏற்படுத்தியுள்ளனர்.

மருத்துவமனையின் தரைத்தளத்தில் உள்ள புறநோயாளிகள் பிரிவில் ஆக்சிஜன் வசதிகளுடன் தற்காலிக படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. முதற்கட்டமாக 100 என்ற அளவில் இருந்த படுக்கைகளின் எண்ணிக்கை இப்போது 180ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இரண்டே நாளில் இந்த புதிய பிரிவு ஏற்படுத்தப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து வரப்படும் கொரோனா நோயாளிகளை விரைந்து பரிசோதித்து அவர்களுக்கு தேவையான சிகிச்சையை உடனுக்குடன் பரிந்துரைக்க கொரோனா சிகிச்சை பிரிவின் முகப்பில் மருத்துவ குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். ஆக்சிஜன் சிகிச்சை தேவைப்படுபவர்கள் உடனுக்குடன் ஜீரோ நிலை ஆக்சிஜன் பாய்ண்ட் பிரிவில் அனுமதிக்கப்படுகின்றனர்.

அங்கு அவர்களுக்கு முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் அவர்கள் வார்டுகளுக்கு மாற்றப்படுகின்றனர். இதனால் சிகிச்சைக்காக நோயாளிகள் காத்திருக்கும் நிலை தவிர்க்கப்படுகிறது. ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் தற்போது 1300 பேர் சிகிச்சை பெறுகின்றனர். ஐசியூ பிரிவில் 150 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா நோயாளிகள் வருகை அதிகரித்து கொண்டே இருப்பதால் இங்கு மேலும் 1000 படுக்கைகள் ஏற்படுத்தும் பணியும் தீவிரமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: