நோயாளிகளுக்கான சேவையே முக்கியம்: இப்ப எனக்கு கல்யாணம் வேண்டாம்! நிச்சயிக்கப்பட்ட பெண் டாக்டர் திடீர் முடிவு

நாக்பூர்: கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனது நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை பெண் டாக்டர் ஒருவர் நிறுத்திவிட்டார். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள இருதயவியல் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரியும் அபூர்வாவுக்கு கடந்த ஏப்ரல் 26 அன்று திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால், அவர் தனது திருமணத்தை ஒத்திவைத்து விட்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘கொரோனா பாதிப்பால் கடந்தாண்டு செப்டம்பரில் எனது தந்தை இறந்துவிட்டார். அவரது இழப்பு எனக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. என்னை போலவே, பல குடும்பங்கள் கொரோனாவால் பல இழப்புகளை சந்தித்து வருகின்றன. ஒவ்வொரு நாளும் அவர்கள் உதவிகள் இன்றி தவித்து வருகின்றனர்.

நான் ஒரு மருத்துவ ஆலோசகராக இருப்பதால், எனக்கு ஒரு நாளைக்கு பல தொலைபேசி அழைப்புகள் வருகின்றன. என்னிடம் மக்கள் விரக்தியுடனும், கோபத்துடனும் பேசுகிறார்கள்.

கொரோனாவின் இரண்டாவது அலையால், மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை அதிகளவில் உள்ளது. கொரோனா நோயாளிகளுக்காக நான் ஒவ்வொரு நிமிடமும் சேவை செய்து வருகிறேன். இந்த கடினமான நேரத்தில் எனக்கு திருமண ஏற்பாடுகள் நடந்தன. தேதிகளும் முடிவு செய்யப்பட்டன. படுக்கைகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், மருந்துகள், வென்டிலேட்டர்கள்,  மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை உள்ள இந்த நேரத்தில் எனக்கு திருமணம்  தேவையா? என்று எனக்குள் கேள்விகள் எழுந்தன. அதனால், எனது திருமணத்தை குறிப்பிட்ட நாளில் செய்து கொள்ள விரும்பவில்லை. எனது திருமணம் நடந்த அடுத்த நாள் 20 முதல் 25 பேர் கொரோனாவால் பாதிக்கப்படுவதை விரும்பவில்லை. இதைப் பற்றி என் குடும்பத்தில் தெரிவித்துவிட்டேன். என்னுடைய அம்மா, சகோதரி, மணமகன் குடும்பத்தினர் ஆகியோர் எனது முடிவை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டனர். கொரோனா நோயாளிகளுக்கு சேவை செய்வதில் மகிழ்ச்சியடைகிறேன்’ என்றார்.

Related Stories: