தமிழகத்தில் சனி, ஞாயிறு ஆகிய 2 தினங்களில் மட்டும் ரூ.855 கோடிக்கு மது விற்பனை

சென்னை: தமிழகத்தில் சனி, ஞாயிறு ஆகிய 2 தினங்களில் மட்டும் 855 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. கடந்த 2003ஆம் ஆண்டு மது விற்பனையை டாஸ்மாக் நிறுவனம் ஏற்றது முதல் 2 நாளில் இந்த அளவுக்கு மது விற்பனை நடந்திருப்பது இதுவே முதல் முறை.

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக தமிழகம் முழுவதும் இன்று முதல் வருகின்ற 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இந்த 15 நாட்களும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற அறிவிப்பால் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் மாநிலம் முழுவதும் உள்ள 5,400 மது கடைகளில் விற்பனை களை கட்டியது. மது பிரியர்கள் போட்டி போட்டுக்கொண்டு மது பாட்டில்களை வாங்கி சென்றனர்.

அதனால் சனிக்கிழமை 426.24 கோடி ரூபாயாக இருந்த மது விற்பனை ஞாயிறு அன்று 428.69 கோடி ரூபாயாக அதிகரித்தது. 2 நாட்களில் மட்டும் டாஸ்மாக் நிறுவனத்திற்கு மது விற்பனை மூலம் 854.91 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. சென்னை மண்டலத்தில் மிக அதிகமாக 199.39 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.

இதற்கு அடுத்த இடத்தில் மதுரை மண்டலம் உள்ளது. அங்கு 184.9 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி இருக்கிறது. திருச்சியில் 170.24 கோடிக்கும், சேலத்தில் 156.39 கோடிக்கும், கோவையில் 144.99 கோடிக்கும் மது விற்பனையாகி இருப்பதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 2003ஆம் ஆண்டு முதல் அரசு நிறுவனமான தமிழ்நாடு மாநில வாணிப கழகம் எனப்படும் டாஸ்மாக் நிறுவனம் நேரடி மது விற்பனையில் ஈடுபட்டுள்ளது.

கடந்த 18 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2 நாட்களில் மட்டும் சுமார் 855 கோடி ரூபாய்க்கு மது விற்பனை மூலம் வருவாயை குவித்து இருப்பது இதுவே முதல்முறை. 15 நாட்கள் டாஸ்மாக் கடைகள் கிடையாது என்பதால் சிலர் முன் கூட்டியே வாங்கி பதுக்கியுள்ள பாட்டில்களை கள்ளத்தனமாக விற்பனை செய்ய முயன்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: