'சாத்தியம் உள்ள ஆலைகளில் எல்லாம் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கப்படும்'!: அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி..!!

காஞ்சிபுரம்: திருச்சி பெல் தொழில்சாலை உள்ளிட்ட இதர தொழிற்சாலைகளில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய வாய்ப்பு இருந்தால் அங்கெல்லாம் விரைவில் உற்பத்திக்கான பணிகள் தொடங்கப்படும் என்று தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். அவர் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி தொழிற்சாலையில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆக்சிஜன் உற்பத்தி தொழிற்சாலை, வட மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கான ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. 

ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களிடையே பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, இந்த ஆலையில் நாளொன்றுக்கு 160 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போதைய தேவையை கருதி, 180 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது என்றார். திருச்சியில் உள்ள பெல் மற்றும் இதர தொழிற்சாலைகளில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் வாய்ப்பு இருந்தால் உடனடியாக அதற்கான பணிகள் தொடங்கப்படும் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி அளித்தார். 

மத்திய அரசின் வழிகாட்டுதல்படி அண்டை மாநிலங்களுக்கு ஆக்சிஜன் கொண்டு சொல்லப்பட்டாலும் தமிழ்நாட்டுக்கான இருப்பு குறைந்துவிடாமல் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தங்கம் தென்னரசு கூறியிருக்கிறார். இந்த ஆய்வின் போது ஊரக தொழிற்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன்,  காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். 

Related Stories: