தமிழகம் உள்பட 5 மாநில தேர்தல் நடந்தபோது கொரோனா 2வது அலை குறித்து எங்களிடம் சொல்லவில்லை: தலைமை தேர்தல் ஆணையர் பரபரப்பு பேட்டி..!

புதுடெல்லி: 5 மாநில சட்டசபை தேர்தல் நடந்தபோது கொரோனா 2வது அலை குறித்து சுகாதாரத்துறை கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை என்று தலைமை தேர்தல் ஆணையர் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். இந்திய தலைமை தேர்தல் ஆணையராக பதவிவகித்த சுனில் அரோரா, 5 மாநில தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்திலேயே பணி ஓய்வுபெற்றார். அதனை தொடர்ந்து புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில், 5 மாநில தேர்தலை முடித்துவிட்டு முதன்முறையாக அவர் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியின் விபரம் வருமாறு:

சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வரைவு வாக்குமூலத்தில், கொரோனா பரவலால் தேர்தலை ஒத்திவைப்பது குறித்து ஆணையம் பரிசீலனை செய்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அது எந்த காலகட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு?

தேர்தல் கமிஷனை பொருத்தமட்டில், 5 மாநில தேர்தல்களை ஒத்திவைக்கும் எண்ணம் இல்லை. கடைசி இரண்டு கட்டங்களை இணைத்து ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கை மட்டுமே பெறப்பட்டது. அந்த நேரத்தில், இரண்டு கட்டங்களையும் சேர்த்து ஒரே கட்டமாக தேர்தல் நடத்தினால் அதனால் ஏற்படும் பல்வேறு விளைவுகள்  குறித்து விவாதிக்கப்பட்டது. தேர்தல் பணி அலுவலர்கள் மற்றும் மத்திய படைகளை ஒதுக்கீடு செய்வது போன்றவை முன்கூட்டியே தீர்மானிக்கப்படுகிறது. அதனால், கடைசி இரண்டு கட்டங்களை சேர்த்து தேர்தல் நடத்துவது அவசியமாக கருதப்படவில்லை.

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, கடைசி 2 கட்டங்களை ஒத்திவைக்க காங்கிரஸ் கட்சி கோரியபோது, இந்த கோரிக்கையை தேர்தல் ஆணையம் கருத்தில் கொண்டதா? மற்ற தேர்தல் ஆணைய உறுப்பினர்களிடம் இருந்து ஏதேனும் பரிந்துரை இருந்ததா?

ரம்ஜான் உள்ளிட்ட அனைத்து பண்டிகைகள் மற்றும் விடுமுறை நாட்களை கணக்கிட்டே தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டன. தேர்தல்களை ஒத்திவைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைக்கவில்லை.

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில், மறுவாக்கு எண்ணிக்கை தொடர்பாக திரிணாமுல் முகவர் கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்தது. இந்த விசயத்தில், நந்திகிராம் தேர்தல் அதிகாரிக்கு எதிராக தற்போதைய திரிணாமுல் அரசால் நெருக்கடி வரவாய்ப்புள்ளது. அதனால், வாக்கெடுப்புக்கு பிந்தைய காலகட்டத்தில் சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் உரிய பாதுகாப்பை வழங்குமா?

பெரும்பாலும் தேர்தல் பணியில் ஈடுபடும் சில அதிகாரிகள், புதிய அரசாங்கம் அமைந்த பின்னர் அவர்களின் கோபத்திற்கு ஆளாகின்றனர். இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு புகார்கள் வருகின்றன. அவர்களின் பணி பாதுகாப்பில் தேர்தல் ஆணையம் அக்கறை கொண்டுள்ளது. அதனால், தலைமை நிர்வாக அதிகாரி அலுவலகத்தில் உள்ள மூத்த அதிகாரிகளுக்கு, அவர்களின் பதவிக் காலம் முடிவடைந்து ஓராண்டுக்கு எவ்வித ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று தலைமைச் செயலாளர்களுக்கு தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளது. மேலும், தேர்தல் பணியில் இருந்து மீண்டும் பழைய பணிக்கு திரும்பும் அதிகாரிகள் உட்பட அனைத்து கள அலுவலர்கள் மீதும் குறிவைத்து ஒழுங்கு நடிவடிக்கை எடுக்கவில்லை என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில தேர்தலை தேர்தல் ஆணையம் எவ்வாறு மதிப்பிடுகிறது?

மேற்கு வங்கத்தில் 82.2%, அசாமில் 82.3%, புதுச்சேரியில் 83.4%, கேரளாவில் 74.5%, தமிழ்நாட்டில் 73.6% வாக்காளர்கள் தங்கள் வாக்கு உரிமையை பயன்படுத்தி உள்ளனர். 5 மாநில தேர்தல்களும் அமைதியாக நடத்தி முடிக்கப்பட்டன. கொரோனா வைரஸ் தொற்று பரவல் இருந்த போதிலும், நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடித்தோம்.

 கோவிட் - 2020 தேர்தல் வழிகாட்டுதல்களை தேர்தல் ஆணையம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களா?

பீகார் தேர்தலில் கொரோனா வழிகாட்டுதல்கள் சிறப்பாக பின்பற்றப்பட்டன. கடந்த பிப்ரவரியில் 5 மாநில தேர்தல்கள் அறிவிக்கப்பட்டபோது, கொரோனா நிலைமை கட்டுக்குள் இருந்தது. தொற்றுநோயின் இரண்டாம் அலை தொடர்பாக, சுகாதார அதிகாரிகள், நிபுணர்கள் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. இருப்பினும், கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை தேர்தல் ஆணையம் பின்பற்றியது. கொரோனா நிலைமை தற்போது தீவிரமடைந்து உள்ளதால், வழிகாட்டல் நெறிமுறைகளில் சீர்திருத்தம் செய்ய தேர்தல் ஆணையம் தயாராக உள்ளது.

 தேர்தல் ஆணையத்தின் சார்பற்றத்தன்மை மற்றும் நேர்மை குறித்து, அரசியல்வாதிகள் சிலர் அதிருப்தி தெரிவிக்கின்றனர். இது, தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மையை பாதித்ததா?

தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மையானது, வாக்காளர்களால் அளிக்கப்படும் நம்பிக்கையிலிருந்து வருகிறது. கொரோனா பரவல் இருந்தபோதிலும் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களித்தனர். பீகார் தேர்தலுக்குப் பிறகு, தற்போது நடத்தி முடிக்கப்பட்ட 5 மாநில தேர்தல்கள் மற்றொரு நம்பிக்கையின் அடையாளமாகி உள்ளது. எவ்வித சந்தேகத்திற்கு இடமின்றி, அனைத்து வேட்பாளர்களும், அரசியல் கட்சிகளும் தேர்தல் முடிவை ஏற்றுக்கொண்டனர். தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை முன் எப்போதும் இல்லாத அளவிற்கு வலுவாக உள்ளது. இவ்வாறு அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

Related Stories: