மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: பரபரப்பான பைனலில் ஸ்வரெவ் வெற்றி..! 3 செட்களில் பெரட்டினியை வீழ்த்தினார்

மாட்ரிட்: மாட்ரிட் ஓபன் டென்னிசில் ஆடவர் ஒற்றையர் சாம்பியன் பட்டத்தை ஜெர்மனியின் இளம் வீரர் அலெக்சாண்டர் ஸ்வரெவ் கைப்பற்றியுள்ளார். நேற்று நடந்த பைனலில் அவர், இத்தாலி வீரர் மாட்டியோ பெரட்டினியை 3 செட்களில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றினார். பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளுக்கு பயிற்சி களமாக கருதப்படும் மாட்ரிட் ஓபன் போட்டி, கடந்த 10 நாட்களுக்கு முன் ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் துவங்கியது. இதில் ஆண்களுக்கான இறுதிப்போட்டி நேற்று நடந்தது. விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியில் முதல் செட்டில் அலெக்சாண்டர் ஸ்வரெவ்-மாட்டியோ பெரட்டினி இருவருமே திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முதல் செட்டில் பெரட்டினியின் சர்வீஸ்களை, ஸ்வரெவ்வால் பிரேக் செய்ய முடியவில்லை. அதேபோல் ஸ்வரெவும் தனது சர்வீஸ்களை விட்டுக் கொடுக்காமல் தொடர்ந்து கைப்பற்ற, அந்த செட் டைபிரேக்கர் வரை நீடித்தது.

டை பிரேக்கரில் பெரட்டினியின் சர்வீஸ்களில் அனல் பறந்தது. முதலில் அவரது சர்வீஸ்களை ஸ்வரெவ்வால் முற்றிலும் எதிர்கொள்ள முடியவில்லை. மேலும் அதனால் திகைப்புக்குள்ளான ஸ்வரெவ், தனது சர்வீஸ்களையும் கோட்டை வி்ட்டார். இதனால் டைபிரேக்கரில் 5-0 என பெரட்டினி முன்னிலை பெற்றார். அதன் பின்னர் சுதாரித்து ஆடிய ஸ்வரெவ், தொடர்ந்து 5 புள்ளிகளை கைப்பற்றினார். இதனால் 5-5 என்ற பரபரப்பான கட்டத்தை டைபிரேக்கர் எட்டியது. அடுத்து ஸ்வரெவ் தனது சர்வீசை  தக்க வைக்க 6-5 என அவருக்கு முன்னிலை கிடைத்தது. இந்நிலையில் பெரட்டினியின் சர்வீசை பிரேக் செய்தால், முதல் செட்டை கைப்பற்றலாம் என்ற நிலையில் இருந்த ஸ்வரெவ், அடுத்தடுத்து கோட்டை விட்டார். இதையடுத்து முதல் செட் 7-6 என்ற கணக்கில் பெரட்டினியின் வசமானது.

ஆனால் முதல் செட்டோடு திருப்தியடைந்து விட்டார் பெரட்டினி என்றுதான் கூற வேண்டும். அடுத்த 2 செட்களில் 3 கேம்களை அவர், ஸ்வரெவ்விடம் பறி கொடுத்தார். இதனால், 6-7, 6-4, 6-3 என 3 செட்களில்  பைனலில் வென்று, மாட்ரிட் ஓபன் கோப்பையை ஸ்வரெவ் கைப்பற்றினார். கடந்த 2018ல் ஆஸ்திரியாவின் டொமினிக் தீமை பைனலில் வீழ்த்தி, மாட்ரிட் ஓபனில் ஸ்வரெவ் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 2ம் முறையாக கோப்பையை கைப்பற்றிய மகிழ்ச்சியில் ஸ்வரெவ் கூறுகையில், ‘‘இது என்னுடைய மிகச் சிறந்த வெற்றி. குறிப்பாக  ஏடிபி மாஸ்டர்ஸ் 1000 போட்டிகளில் கடந்த 3 பைனல்களில் நான் தோல்வியடைந்துள்ளேன். இதனால் இந்த வெற்றி, எனக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது’’ என்று தெரிவித்தார்.

Related Stories: