×

பாக்சிங்கில் பரிணமிக்கும் பள்ளிப்பாவை!

நன்றி குங்குமம் தோழி

அச்சிறுப்பாக்கத்தை அடுத்துள்ள தேன்பாக்கம் என்ற கிராமம். புள்ளினங்களும், கால்நடைகளும் விழித்துக்கொள்ளும் தருணத்தில், தவறாமல் எழுந்து விடுகிறார் கோதைஸ்ரீ என்ற சிறுமி. வீட்டு வேலைகளோ, வயல் வேலைகளோ இதற்கு காரணம் அல்ல. வேறு என்னதான் காரணம் என்று நீங்கள் கேட்பது புரிகிறது… பாக்சிங் மீதுள்ள தீரா ஆர்வம்தான்! இதற்கான பயிற்சி எடுப்பதற்காக தனது கிராமத்தில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரம் தினமும் மிதிவண்டியில் வந்து செல்கிறார் இந்த பாக்சிங் பாவை.

‘‘குத்துச்சண்டை விளையாட்டைப் பெண்கள் அவ்வளவாக தேர்ந்து எடுக்க மாட்டார்கள். இதனைக் கற்றுக் கொள்வதால் ஆபத்தான தருணங்களில் பெண்களால் தங்களைத் தாங்களே தற்காத்து கொள்ள முடியும். இந்தக் காரணங்களுக்காகத்தான் சவால்கள் நிறைந்த இந்த விளையாட்டைத் தேர்ந்து எடுத்தேன்’’ என்றார் கோதை.

‘‘என் ஆர்வத்தை என் பெற்ேறாரும் புரிந்து கொண்டாங்க. என்னுடைய விருப்பத்துக்கு அவங்க தடை சொல்லவில்லை மறுக்கவும் இல்லை. பாக்சிங் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியாவின் விழுப்புர மாவட்ட செயலாளராக உள்ள சதீஷ்குமார் என்ற பயிற்சியாளரிடம் என்னைச் சேர்த்து விட்டாங்க. பத்து வயதில் இருந்து அவரிடம் முறையாக குத்துச்சண்டையையும், அதில் உள்ள நுணுக்கங்களையும் கற்று வருகிறேன்.

ஐந்தாவது படித்து கொண்டு இருக்கும் போது மாவட்ட அளவிலான போட்டியில் முதன் முறையாக கலந்து கொண்டேன். அதில், சப்-ஜூனியர் பிரிவில், இருபத்தெட்டு கிலோ முதல் முப்பது கிலோ வரை எடை உள்ள சிறுமியருக்கான லைட்ஃப்ளை வெயிட் கேட்டகிரியில் கலந்து கொண்டேன்.

காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்போர்ட்ஸ் டெவலப்மென்ட் அத்தாரிட்டி ஆஃப் தமிழ்நாடு விளையாட்டுத் திடலில் நடைபெற்ற இந்தப் போட்டியில் மூன்று சுற்றுகளின் முடிவில் மதிப்பெண்கள் அடிப்படையில் ஒட்டு மொத்தமாக பத்து புள்ளிகள் எனக்குக் கிடைத்தன. மேலும், பங்கேற்ற முதல் போட்டியிலேயே, தங்கப் பதக்கத்தையும் பெற்றேன்’’ என்றவர் சற்று இடைவெளி விட்டு தனது வெற்றிப் பயணத்தைப் பற்றி பேசத்
துவங்கினார்.

‘‘ஆறாவது படிக்கும் போது இருந்தே, மாநிலப் போட்டிகளில் கலந்து கொள்ளத் தொடங்கினேன். தொடர்ந்து நான்கு வருடங்கள் பள்ளிகளுக்கு இடையேயான மாநிலப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றேன். ஒன்பதாம் வகுப்பில் இருந்து ஃப்ளை வெயிட் பிரிவில் (40 கிலோ முதல் 42 கிலோ வரை) கலந்து கொள்ளத் தொடங்கினேன். 2014-ம் ஆண்டில் இருந்து 2018-ம் ஆண்டு வரை ஐந்து மாநிலப் போட்டிகளில் பங்கேற்று 3 தங்கப் பதக்கமும், இரண்டு வெள்ளிப் பதக்கமும் வென்றேன்.

2018-ம் ஆண்டு சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாநில குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் வென்றேன். அதே ஆண்டில், தமிழக அணிக்காக நேஷனல்ஸ் போட்டிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ராஜஸ்தானில் நான்கு நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில் காலிறுதியில் டெல்லி வீராங்கனையை பத்துக்கு ஏழு என்ற புள்ளி கணக்கிலும், அரையிறுதி ஆட்டத்தில், 10-8 என்ற புள்ளி வித்தியாசத்தில் பஞ்சாப் வீராங்கனையையும் வென்று இறுதிப் போட்டிக்குத் தகுதிப் பெற்றேன். ஃபைனல்சில் நானும் அரியானா வீராங்கனையும் தங்கப் பதக்கத்திற்காக மோதினோம். போட்டி மிகக் கடுமையாக இருந்தது.

மூன்று சுற்றுகளாக நடைபெற்ற போட்டியில் எதிராளியை ஜட்ஜ் பண்ணுவது மிகவும் சவாலாக இருந்தது. ஆனாலும் மூன்று சுற்றுகள் வரை கடுமையாகப் போராடி பத்துக்கு - எட்டு என்ற புள்ளிக் கணக்கில் இரண்டாமிடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றதை என்றைக்கும் என்னால் மறக்க முடியாது’’ என்றவர் பயிற்சி முறைகளை பற்றி பகிர்ந்து கொண்டார்.  

‘‘எங்களுடைய பயிற்சி முறைகளில் கோச் சொல்லுகின்ற டெக்னிக்குகளை முக்கியமாக செய்து பார்ப்போம். வாரத்தின் முதல் இரண்டு நாட்களில் Pad Workout அடுத்த இரண்டு நாட்கள் Bag Workoutம் 2 மணி நேரம் தொடர்ந்து செய்வோம். பயிற்சிக்கு நடுவே 5 நிமிடம் ரெஸ்ட் எடுத்துக் கொள்வோம்.

Pad Workout ன் போது கோச், தன் ஒரு கையில் pad-ஐ மாட்டிக் கொள்ள நாங்கள் வலது மற்றும் இடது கைகள் என் மாறி மாறி குத்துவோம். அதே மாதிரி, Bag Workoutல் பாக்சிங் ரிங் நடுவே, மணல் மூட்டையை தொங்கவிட்டு இருப்பாங்க. அந்த மூட்டையில் வேகமாக குத்தி பயிற்சி செய்யணும். இந்தப் பயிற்சிகளைத் தொடங்குவதற்கு முன்னால், வார்ம் அப், ஸ்டெச்சிங் பயிற்சி, தண்டால் எடுத்தல்,  ஸ்கிப்பிங் ஆடுதல் போன்ற உடற்பயிற்சிகளை ஒரு மணி நேரம் செய்வோம். இதனால், ஸ்டமினா அதிகரிக்கும். சீக்கிரம் களைப்பு ஏற்படாது.

பாக்சிங் விளையாட்டுக்களை பொறுத்தவரை பயிற்சியின் போது Spare எனச் சொல்லப்படுகின்ற Trail Fight ரொம்ப முக்கியமானது. சக வீராங்கனைகளுடன் இதில் பயிற்சியில் ஈடுபடுவோம். அதாவது நம்முடன் பயிற்சி எடுப்பவர்களுடன் போட்டி போல் சண்டை போடணும். ஒவ்வொரு சுற்றுக்கு நடுவே ஒரு நிமிஷம் ரெஸ்ட் எடுத்துக் கொள்வோம்.

போட்டி நெருங்கும் சமயங்களில் இந்த பயிற்சி நேரத்தை அதிகப்படுத்துவார். வொர்க் - அவுட்டும் அதிகமாக இருக்கும். முக்கியமா, Pad Punch பயிற்சி அதிகமா இருக்கும். மேலும் எதிராளியைத் தாக்குவதற்கான டெக்னிக்குகளைச் சொல்லிக் கொடுப்பாங்க’’ என்றவர் பள்ளிகளுக்கு இடையேயான போட்டிகள், மாநில மற்றும் தேசியப் போட்டிகள் எனப் பல போட்டிகளில் கலந்து கொண்டு இதுவரை 20 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் என 25 பதக்கங்கள் வென்றுள்ளார்.

‘‘குத்துச்சண்டையில் சாதிக்க வேண்டும் என்பது தான் என் கனவு. கோச் சதீஷ்குமார் சார்தான் என்னுடைய ரோல் மாடல். அவரை மாதிரி வரவேண்டும். நமது நாட்டுக்காக சர்வதேசப் போட்டிகளில் கலந்து கொண்டு நிறைய மெடல்கள் ஜெயிக்க வேண்டும்’’ என்றார் கோதைஸ்ரீ.

-பாலுவிஜயன்

Tags :
× RELATED ஆரோக்கிய கூந்தலுக்கு உதவும் அர்கன் ஆயில்!